தமிழகத்தில் பிளஸ் 1 தேர்ச்சி; திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்ச்சி; திருப்பூர் மாவட்டம் முதலிடம்
X

Tirupur News,Tirupur News Today-பிளஸ் 1 தேர்ச்சியில், மாநில அளவில் முதலிடம் பெற்ற திருப்பூர் மாவட்டம். (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today-நேற்று பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியான நிலையில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. பிளஸ் 2 தேர்வில், இரண்டாமிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம், பிளஸ் 1ல், முதலிடத்தை பிடித்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத் தோ்வு, கடந்த மாா்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடந்தது.

இத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முழுவதும், 93 தோ்வு மையங்களில் 217 பள்ளிகளைச் சோ்ந்த 10 ஆயிரத்து 999 மாணவா்கள், 13 ஆயிரத்து 233 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 232 போ் தோ்வு எழுதினா். இந்த தோ்வு முடிவு நேற்று மதியம் வெளியானது. இதில் திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த 10 ஆயிரத்து 441 மாணவா்கள், 12 ஆயிரத்து 915 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 356 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் 94.93 சதவீதம் , மாணவிகள் 97.60 சதவீதம் என மொத்தம் 96.38 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 4.21 சதவீதம் அதிகமாகும்.

தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் திருப்பூா் மாவட்டம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. பிளஸ் 1 பொதுத்தோ்வில் திருப்பூா் மாவட்டம் கடந்த 2022 ம் ஆண்டில் 92.17 சதவீதத்துடன் மாநில அளவில் 11-வது இடத்தை பிடித்திருந்த நிலையில், நடப்பாண்டில் 96.38 சதவீதத்துடன் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பூா் மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 5 சுயநிதிப் பள்ளிகள், 72 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 90 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. 10-ம்வகுப்பு தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 11-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 29-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 18 இடங்கள் முன்னேறி 11-வது இடம் பெற்றுள்ளது. பிளஸ்-2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்தது. அரசு பள்ளிகள் அளவில், மாநில அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது. 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்ட பள்ளிகள் சாதனை படைத்தது திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10-ம்வகுப்பு தேர்வில் 11-ம் இடத்தை பிடித்துள்ளது ஆறுதலை அளித்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளில் திருப்பூர் மாவட்ட பள்ளிகள் சாதனை படைத்தது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது,

மாணவ, மாணவிகளுக்கு தினமும் 25 மதிப்பெண்ணுக்கு 'யூனிட் டெஸ்ட்' என்ற பெயரில் வகுப்பறை தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை முந்தைய நாளே மாணவ, மாணவிகளிடம் தெரியப்படுத்தி அதை படிக்க வைத்து மறுநாள் தேர்வு வைக்கப்பட்டது. இதில் இலகுவான கேள்வி முதற்கொண்டு கடினமான கேள்விகள் கூட கேட்கப்பட்டன. இதன் வாயிலாக அனைத்து பாடங்களையும் படிக்கும் சூழல் மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டது. அதே நேரம் குறிப்பிட்ட பாடம் கற்பதில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்கள் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற வைக்கும் பொறுப்பு, அந்த பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் உட்பட நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களின் முழு கவனமும், கல்வி போதிப்பின் மீது மட்டுமே இருக்கும் வகையில் கவனம் செலுத்தப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் தான் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.மாநில அளவிலும் சாதனை படைக்க முடிந்திருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!