கர்ப்பிணியாக நடித்து, ஆண்குழந்தையை கடத்திய பெண் கைது; குழந்தை மீட்பு

திருப்பூரில் கர்ப்பிணியாக நடித்து, ஆண்குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த குழந்தையை மீட்டனர். (கோப்பு படம்)
tirupur News, tirupur News today- திருப்பூர் தாராபுரம் ரோடு செரங்காட்டை சேர்ந்தவர் கோபி (வயது 34). பனியன் நிறுவனத்தில் அயர்னிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (30). நிறைமாத கர்ப்பிணியான சத்யாவுக்கு, கடந்த 19-ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த ஒரு வாரமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று சத்யாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து சென்ற போது, 2 நாட்களாக சத்யாவுக்கு உதவி செய்து வந்த இளம்பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றார். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது சத்யாவுக்கு உதவி செய்து வந்த பெண், குழந்தையை கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதையடுத்து அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அவரை பிடிக்க திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திக்கேயன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் , குழந்தையை கடத்தி சென்ற பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை தேடி வந்தனர்.
அவர் எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக குழந்தையை கடத்தி சென்றார், குழந்தையை கடத்தி விற்கும் கும்பலை சேர்ந்தவரா? என்று விசாரணை நடத்தி தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையை கடத்தி சென்ற பெண் திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த முத்துசண்முகம் என்பவரின் மனைவி பாண்டியம்மாள் (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் இடுவாய் சென்று பாண்டியம்மாளை கைது செய்ததுடன் ஆண் குழந்தையை அவரிடமிருந்து மீட்டனர். பின்னர் கைதான பாண்டியம்மாளிடம் குழந்தையை கடத்தி சென்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். பாண்டியம்மாளுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் குழந்தை இல்லாத ஏக்கத்தை போக்க குழந்தையை கடத்த திட்டமிட்டார். இதற்காக தான் கர்ப்பமாக இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று அங்கு குழந்தையை கடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் சத்யா குழந்தை பெற்றுள்ளதை அறிந்த பாண்டியம்மாள், சத்யாவின் மாமியாருடன் நெருங்கி பழகியுள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினருக்கு உதவி செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை சத்யாவும், அவரது மாமியாரும் நம்பவே, அவர்களுடன் நெருங்கி பழகியுள்ளார்.
நேற்று மாலை சத்யாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக அழைத்து சென்ற போது பாண்டியம்மாள் குழந்தையை கையில் எடுத்து சென்றுள்ளார். பின்னர் குழந்தையை தான் கொண்டு வந்த பையில் குழந்தையை வைத்துக்கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு சென்றதும் உறவினர்களிடம் தனக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாண்டியம்மாள் கர்ப்பமாக இருந்ததாக கூறியதால் உறவினர்களும் அவர் கூறியதை நம்பியுள்ளனர்.
இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளதாகவும், அதனை கடத்தி சென்ற பாண்டியம்மாளின் உருவப்படத்தை போலீசார் சமூக வலை தளங்களில் வெளியிட்டனர். இதனை பார்த்த பாண்டியம்மாளின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்ததுடன் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு போலீசார் இடுவாய் சென்று பாண்டியம்மாளை கைது செய்தனர்.
நேற்றிரவு 7மணிக்கு குழந்தை கடத்தப்பட்ட நிலையில், இன்று காலை 7மணிக்கு 12 மணி நேரத்தில் போலீசார் குழந்தையை மீட்டனர். இதையடுத்து சிறப்பாக செயல்பட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். கர்ப்பிணி போல் நடித்து ஆண் குழந்தையை பெண் கடத்தி சென்ற சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu