கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி தொடங்கா விட்டால் 5-ல் காத்திருப்பு போராட்டம்; விவசாயிகள் முடிவு
Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்.
Tirupur News. Tirupur News Today- ஐகோர்ட் உத்தரவுப்படி, கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை தொடங்கா விட்டால் 5-ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று, ஆயக்கட்டு நில உரிமையாளர்கள், பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னையன், பொருளாளர் சண்முகராஜ் மற்றும் கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொருளாளர் செங்கோட்டு வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
கீழ்பவானி பாசன திட்டத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெறுகிறது. 70 ஆண்டுகால இந்த திட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு வேலை தொடங்கப்பட்டு பின்னர் பணிகள் நடைபெறாமல் முடக்கப்பட்டது. கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகள் ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
சீரமைப்பு வேலைகள் செய்யப்படாத காரணத்தால் இந்த பாசன ஆண்டில் (2022-23) மட்டும் நான்கு முறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதம் தண்ணீர் இடைநிறுத்தப்பட்டதால் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். இந்த சீரமைப்பு வேலைகளை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகளை வருகிற மே மாதம் 1-ம் தேதி தொடங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 1-ம் தேதி எந்தவித காலதாமதம் செய்யாமல் கால்வாய் சீரமைப்பு வேலைகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மனு அளித்த சங்க நிர்வாகிகள் கூறும்போது, 'வருகிற 1-ம் தேதி கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்காவிட்டால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடருவதுடன் 5-ம் தேதி ஈரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu