திருப்பூர்; 265 கிராமங்களில் சபா கூட்டம் நடத்த ஏற்பாடு
Tirupur News. Tirupur News Today- வரும் மே 1ல் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு (கோப்பு படம்)
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், மே தினத்தன்று, கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் கிராமங்களில் இருந்து தான் தொடங்குகிறது என்றார் காந்தியடிகள். கிராமங்கள் தன்னளவில் தன்னிறைவு பெற்று விளங்கினால் மட்டுமே, பொருளாதார வளர்ச்சி நிலைமையில் முன்னேற்றம் பெற முடியும். எனவே ஒவ்வொரு கிராமமும் முழு அதிகாரம் பொருந்தியதாக மாற்றி அமைக்கும்போது, கிராமங்கள் ஒரு சிறு குடியராகத் திகழும் என்று நம்பிக்கை அளித்தார்.
தற்போது இந்தியாவில் கட்டமைக்கப் பட்டிருக்கிற நமது உள்ளாட்சி அமைப்பு என்பது மிகவும் வலிமை வாய்ந்த, அதிகாரம் பொருந்தியதாகும். இந்தியக் கிராமங்களின் உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் பல்வேறு சட்டத் திருத்தங்களின் வாயிலாக உருவாக்கப்பட்டு பின்னர், மாநிலத் தேர்தல் ஆணையத்துடன் இணைத்துக் கொள்ளப் பட்டன. உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய முக்கியமான பணியினை, மாநிலத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) போன்ற நான்கு நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் இந்த ஒரே நாளில்தான் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து பேசி கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
தொழிலாளர் தினமான வரும் மே 1ம் தேதி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராசபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 265 கிராம ஊராட்சிகளில், காலை, 11:00 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்த விவாதம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகளின் முன்னேற்றம். அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்குவது; அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு; எங்கள் கிராமம், எழில் மிகு கிராமம், ஜல் ஜீவன் என, கிராமசபை கூட்டத்தில், 12 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கிராமசபை கூட்ட நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில், 'நம்ம கிராமசபை' என்கிற ஆன்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டு, கடந்த அக்., முதல் செயல்பாட்டில் உள்ளது.
மக்களின் வருகைப்பதிவு உள்பட கிராமசபை கூட்ட நிகழ்வுகள் அனைத்தையும், இந்த செயலியில் பதிவு செய்யவேண்டும் என தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu