திருப்பூர் மாவட்டம்; சின்ன வெங்காயம், மஞ்சள் அறுவடை தீவிரம்

திருப்பூர் மாவட்டம்; சின்ன வெங்காயம், மஞ்சள் அறுவடை தீவிரம்
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூரில் மஞ்சள் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடையும், நத்தக்காடையூரில் மஞ்சள் அறுவடையும் மிக வேகமாக நடந்து வருகிறது.

Tirupur News. Tirupur News Today- குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர்.அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.


இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது,

குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.75ஆயிரம் வரை செலவாகிறது. சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்து வருகின்றனர்.

தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு எந்த பயிர்களையும் உற்பத்தி செய்யமுடியாதநிலை ஏற்பட்டுவிடும். இதனால் அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும். உரம், இடுபொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேசெல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர்.

நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை. தண்ணீர் கிடைத்து நல்ல விவசாயம் செய்தால் நல்ல விலை கிடைப்பதில்லை. எனவே அரசு முன்வந்து விவசாயிகளை பாதிக்காதவகையில் உரிய விலையை நிர்ணயித்து சின்ன வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல விலை கிடைக்கும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மஞ்சள் அறுவடை

திருப்பூர் நத்தக்காடையூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள மஞ்சள் விளைந்து விட்டதால் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. மஞ்சள் சாகுபடிநத்தக்காடையூர் நகரம், பழையகோட்டை, மருதுறை, குட்டப்பாளையம், முள்ளிப்புரம், பரஞ்சேர்வழி பகுதிகளில் விவசாயம் நடக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல், எள், நிலக்கடலை, சூரியகாந்தி, மக்காச்சோளம் சாகுபடி நடந்து வருகிறது.


மேலும் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீர், குளம், ஓடை பாசன நீர் மூலம் மஞ்சள், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள், கீரை வகைகள், மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி சாகுபடியும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நத்தக்காடையூர் பகுதிகளில் 1000 ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மஞ்சள் அறுவடை 2 வார காலமாக நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து மஞ்சள் கிழங்குகள் டிராக்டர் மூலம் ஏற்றி விவசாயிகள் தோட்ட களங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கலன்கள் மூலம் அடுப்பில் வேக வைத்து வெயிலில் நன்கு காய வைத்து தனி விரலி மஞ்சள், கிழங்கு மஞ்சள் என தரம் பிரிக்கின்றனர். பின்னர் ஈரோடு மஞ்சள் மார்க்கெட், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

மேலும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தினந்தோறும் 1400 மூட்டைகள் வரை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் தற்போது ஒரு குவிண்டால் தனி விரலி மஞ்சள் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 500-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 50-க்கும், தனி கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 740-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 750-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!