பருத்தி இறக்குமதி வரியை உடனடியாக நீக்க, ஜவுளி தொழில்துறை வலியுறுத்தல்

பருத்தி இறக்குமதி வரியை உடனடியாக நீக்க,  ஜவுளி தொழில்துறை வலியுறுத்தல்
X

Tirupur News. Tirupur News Today-பருத்தி இறக்குமதி வரியை உடனடியாக நீக்க, ஜவுளி தொழில்துறை வலியுறுத்தி உள்ளது. (கோப்பு படம்)  

Tirupur News. Tirupur News Today-கடந்த ஆண்டு, ஆடை ஏற்றுமதி சரிவடைந்ததால், பருத்திக்கான இறக்குமதி வரியை உடனடியாக நீக்க வேண்டும் என்று, ஜவுளி தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tirupur News. Tirupur News Today - கடந்த நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம், 35 லட்சத்து 91 ஆயிரத்து 835 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. இறக்குமதி வர்த்தகம் 57.35 லட்சம் கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி மட்டும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 970 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மற்றும் பருத்தி விலை உயர்வு காரணமாக கடந்த நிதியாண்டின் துவக்கமே போராட்டமாக இருந்தது. ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக குறைந்தது. சில மாதங்களில், பஞ்சு - நூல்விலை சீரான நிலையை அடைந்தது. அதற்கு பிறகும் ஏற்றுமதி வர்த்தகம் வேக மெடுக்கவில்லை. போர் சூழலால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார சிக்கன நடவடிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் செலவுகளை குறைத்து கொண்டனர். ஆடை விற்பனையும் முடங்கியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12 ஆயிரத்து இரண்டு கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்திருந்தது. நடப்பு ஆண்டில் 9,930 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 17 சதவீதம் குறைவு.ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பெற்றிருந்த நிலையில் 2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,859 கோடி,2019-20ல் 9,786 கோடி, 2020-21 ஏப்ரல் மாதம் 962 கோடி, 2021-22ல், 9,664 கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இந்தாண்டில் மீண்டும் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறுகையில், ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஆர்டர் வரத்தும், அந்நாடுகளில் ஆடை விற்பனையும் குறைந்துள்ளது. போர் முடிவுக்கு வந்தால் வர்த்தக வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.இந்தநிலையில் பருத்தி மிகை நாடாக திகழ்ந்த இந்தியா, பருத்தி பற்றாக்குறை நாடாக இந்த ஆண்டு மாறியுள்ளது. மொத்த உற்பத்தி 320 லட்சம் பேல்களாக குறைந்துள்ளதாகவும், மத்திய அரசு பருத்திக்கான இறக்குமதி வரியை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

பருத்தியை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித்தொழில், விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக உள்ளது. குஜராத், மஹாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தான் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.ஆண்டுதோறும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை பருத்தி சீசனாகும். ஆண்டுதோறும் 350 லட்சம் பேல்களுக்கும்(ஒரு பேல் 170 கிலோ பஞ்சு) அதிகமாக பருத்தி உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.இவ்வாண்டு பருத்தி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறியுள்ளதாக தெரிவித்துள்ள தொழில்துறையினர், பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் கூறியதாவது,

ஆண்டுதோறும் செப்டம்பர் தொடங்கி மார்ச் வரையிலான காலகட்டத்தில் சந்தையில் 90 சதவீத பருத்தி விற்பனைக்கு வந்துவிடும். இந்த ஆண்டு மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில் 60 சதவீத பஞ்சு மட்டுமே சந்தைக்கு வந்துள்ளது.தவிர மொத்த பருத்தி உற்பத்தி 337 லட்சம் பேல்களாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 320 லட்சம் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 30 லட்சம் பேல் ஏற்றுமதி செய்யப்படும். 20 லட்சம் பேல்கள் தரம் குறைவு காரணமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் பருத்தி மிகை நாடாக இதுவரை திகழ்ந்து வந்த இந்தியா, பருத்தி பற்றாக்குறை நாடாக மாறியுள்ளளது.கடந்த 2021-22-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளிப்பொருட்கள் ஏற்றுமதி 44 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2022-23-ம் ஆண்டில் 35 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த ஏற்றுமதி 18 சதவீதம் குறைந்துள்ளது. ஜவுளித்தொழில்துறையில் நிலவும் நெருக்கடியால் மொத்த உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது. 25 முதல் 30 சதவீதம் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.ஒரு கேண்டி(356 கிலோ) பஞ்சு விலை ரூ.60,700 ஆக உள்ளது. வெளிநாட்டு பஞ்சு ஒரு கேண்டி ரூ. 51,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அரசு பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கிறது. இதை நீக்கினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி இந்திய சந்தைக்கு வந்துவிடும்.

தவிர வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவு பஞ்சு குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். கடந்தாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மத்திய அரசு பஞ்சுக்கு இறக்குமதி வரியை நீக்கியது. அதே போல் தற்போதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். தற்போது உள்ள சூழல் குறித்து 'சைமா', 'சிட்டி' உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சரை விரைவில் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!