சுட்டெரிக்கும் வெயிலில் அவதி; கோடை மழையால் திருப்பூர் மக்கள் ‘ரிலாக்ஸ்’

tirupur News, tirupur News today- திருப்பூரில் நேற்று மாலை மழை பெய்தது.
tirupur News, tirupur News today-திருப்பூர் மாநகரில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலை முதல் வெயிலின் கொடூர தாக்குதலால் ரோட்டில் செல்லவே முடியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அந்த அளவுக்கு மதிய வேளையில் அனல்காற்று வீசியது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் கடுமையாக இருந்தது
மாலை 3.30 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்தகாற்று வீசியது. அதன்பின்னர் பலத்த காற்று வீச தூறலுடன் தொடங்கிய மழை கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக, சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. திருப்பூர் ஈஸ்வரன் கோவில் பாலத்தில் முழங்கால் அளவுக்கு கழிவுநீர் பாய்ந்தது. இருச்சக்கர வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல முடியாமல் திணறினர். இதுபோல் ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலம், அணைப்பாளையம் ஒற்றைக்கண் பாலம், டி.எம்.எப். சுரங்கப்பாலத்துக்கு அடியில் அதிகமாக மழைநீர் தேங்கியது.
பிரதான சாலைகளில் மழைநீர் அதிகமாக பாய்ந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே சென்றதை காண முடிந்தது. திருப்பூர் மாநகரம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன்காரணமாக மரக்கிளைகள் ஆங்காங்கே முறிந்து, உடைந்து விழுந்தது. கடைகளுக்கு முன்பு போடப்பட்ட தற்காலிக பந்தல்கள் காற்றில் பறந்தன. வெயிலின் கொடுமையில் வாடி வதங்கிய திருப்பூர் மக்களுக்கு கொட்டித்தீர்த்த மழை மகிழ்ச்சியையும், குளிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
நுங்கு விற்பனை ‘ஜோர்’
காங்கயம் பகுதியில் வெயில் அதிகரித்து வருவதால் தற்போது நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு வேலைகளுக்காக பகல் நேரங்களில் வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
வழக்கமாக ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால் நடப்பாண்டில் கடந்த மாதம் முதலே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ள தண்ணீரையும், நிழல் தரும் மரங்களையும் தேடிச்செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக நீர்ச்சத்துள்ள மற்றும் முற்றிலும் கலப்படம் இல்லாத முழுமையான இயற்கை குணம் நிறைந்த, உடல் சூட்டை தணிக்கும் பனை நுங்கை தேடிச்சென்று சாப்பிடுகின்றனர்.
அந்தவகையில் தற்போது காங்கயம் பகுதிகளில் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. நகர, கிராம, நெடுஞ்சாலை ஓரங்களில் மர நிழல்களில் நுங்கு விற்பனை நடந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பொதுமக்களிடம் இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளதாக நுங்கு வியாபாரிகள் தெரிவித்தனர். 3 கண் உள்ள ஒரு நுங்கு ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் நுங்கை வாங்கிச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu