திருப்பூரில் ஜல்லிக்கட்டு நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு

tirupur News, tirupur News today- கலெக்டரிடம் மனு அளித்த பொதுமக்கள்.
tirupur News, tirupur News today- திருப்பூர் மாவட்டம், அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. அப்போது அலகுமலை, கணபதிபாளையம், சுப்பேகவுண்டன்பாளையம், ஏ.வேலாயுதம்பாளையம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
அலகுமலையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதால் எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது. காளைகள் மிரண்டு வந்து பொதுமக்களை தாக்குகிறது. அலகுமலை அடிவாரப்பகுதியை நாசப்படுத்தி விடுகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பெண்களும் சிரமப்படுகின்றனர். இதனால் எங்கள் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கடந்த 25-ம் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தையும் புறக்கணித்து விட்டோம்.
செய்தித்துறை அமைச்சர் வருகிற 23-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு நடப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பானவர்கள் கிடையாது. எங்கள் ஊராட்சியில் நடத்த வேண்டாம் என்றுதான் கூறி வருகிறோம். அவ்வாறு மீறி நடத்தினால் நாங்கள் எங்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு, வெளியூர் செல்வோம்' என்று கூறியுள்ளனர்.
மேலும் அலகுமலை ஊராட்சி தலைவர் தூயமணியும் கலெக்டரிடம் மனு அளித்தார். அதில் 'எங்கள் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐகோர்ட்டிலும் வழக்கு தொடுக்கப்பட்டு கலெக்டர் விசாரித்து முடிவு எடுக்க தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். எந்தவித அனுமதியும் பெறாமல் பணிகள் நடக்கிறது. இது பொதுமக்களிடம் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அலகுமலை கோவில் பகுதியை காக்கவும், பெண்கள், பொதுமக்கள், விவசாய நிலத்தை காக்கவும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
கலெக்டர் வினீத் அவர்களிடம், உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும், ஆண்டுதோறும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தங்கள் பகுதியில் இப்போட்டியை நடத்த வேண்டாம், என ஊர் பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தது, அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu