திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைய தேவையில்லை; போலீசார் அறிவுறுத்தல்

tirupur News, tirupur News today-திருப்பூரில் ‘வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைய தேவையில்லை’ என்று தொழில் நிறுவனங்களுக்கு சென்று போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
tirupur News, tirupur News today- வடமாநில தொழிலாளர்கள் வந்தாரை வாழ வைக்கும் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. தொழிலாளர் தேவை அதிகமாக உள்ளதால் திருப்பூர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல் பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மராட்டியம், குஜராஜ், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். பனியன் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் கட்டிட வேலை, ஓட்டல், பேக்கரி, வணிக வளாகங்கள் என அனைத்து தொழிலிலும் வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடனும், தனியாகவும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்றும், அவர்களுக்கு திருப்பூரில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது போன்றும் சித்தரித்து தவறான தகவல்களையும், போலி வீடியோக்களையும் சிலர் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதற்கு அடுத்ததாக வடமாநில ரயில்களில் திருப்பூரில் இருந்து வடமாநிலத்தவர்கள் அதிகமாக செல்வதால் அச்சம் காரணமாக சொந்த ஊர் புறப்பட்டுள்ளனர் என்றும் கிளப்பி விடுகின்றனர். ஆனால் அவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட குடும்பத்துடன் செல்வதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று அங்கேரிபாளையத்தை அடுத்த ஸ்ரீநகர் மற்றும் பி.என்.ரோடு பூலுவப்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் பனியன் நிறுவனங்களுக்கு சென்று, தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் கலந்துரையாடினார். தற்போது உள்ள சூழல் குறித்து தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு கமிஷனர் விளக்கமளித்தார். அப்போது மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம், இன்ஸ்பெக்டர் பிரேமா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
(கோப்பு படம்)
பின்னர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, நிருபர்களிடம் கூறியதாவது,
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற ஒரு போலியான வீடியோ மற்றும் தகவல் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது தவறான தகவல் என்பதை வடமாநில தொழிலாளர்களிடம் தொடர்ந்து தெளிவுப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதுபோன்று ஒரே நிறுவனத்தில் 300-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களுக்கு எந்தவிதமான பிரச்னையோ, பாதிப்போ இல்லை. அனைவரும் அவரவர் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர். ஆனால், சமூக வலைதளங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் போலியான வீடியோக்களை ஒருசிலர் பரப்பி வருகின்றனர். அதுபோன்ற வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம்.
திருப்பூர் மாநகரை பொறுத்தவரை வடமாநில தொழிலாளர்கள் யாரும் எந்தவிதமான துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை. யாரையும் யாரும் தாக்கவில்லை. யாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அப்படி இருக்கும் நிலையில் சம்பந்தமே இல்லாத சில வீடியோக்களை தொடர்புபடுத்தி வாட்ஸ்-அப்பில் பரப்பி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூரில் வசிக்கும் ஒட்டுமொத்த வடமாநில தொழிலாளர்களுக்கும் திருப்பூர் மாநகர காவல்துறை பாதுகாப்பாக இருக்கும். தவறான தகவல்களையும், போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சைபர்கிரைம் போலீஸ் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கலெக்டர் வினீத் கூறுகையில், 'மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை வருவாய்த்துறையுடன் இணைந்து தொழிலாளர் துறை கூட்டாய்வு நடத்தி வடமாநில தொழிலாளர்களின் கோரிக்கையை கேட்டறிய ஏற்பாடு செய்துள்ளோம். வடமாநில தொழிலாளர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்,’ என்றார்.
போலீஸ் எஸ்.பி ஷசாங் சாய் கூறியதாவது,
சமூகவலைதளங்களில் பரவும் தகவல் எதுவும் உண்மையல்ல.பொய்யாக பரப்பப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. வதந்தி பரவாமல் தடுப்பதற்கு தமிழக காவல்துறையின் அலுவலக டுவிட்டர் கணக்கில் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு பதிவிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பிலும் தெளிவுபடுத்தியுள்ளோம். திருப்பூரை பொறுத்தவரை வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். வடமாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால் அதுகுறித்து புகார் தெரிவிக்க மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 94981 01320, 0421 2970017 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியில் பேசி விழிப்புணர்வு வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிக்கு சென்று போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது இந்தி மொழியில் தொழிலாளர்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு விளக்கம் அளித்தார். திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதி மற்றும் அவர்கள் பணியாற்றும் பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது என்பதை விளக்கும் வகையில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாக இந்தி மொழியில் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. புகார் தெரிவிப்பதற்கான எண்களையும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu