வடமாநிலத் தொழிலாளர் பிரச்னை; பீகார் மாநில ஆய்வுக்குழுவினர் திருப்பூரில் ஆலோசனை

tirupur News, tirupur News today- வடமாநில தொழிலாளர்கள் பிரச்னை குறித்து, திருப்பூரில் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள், பீகார் மாநில ஆய்வுக்குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
tirupur News, tirupur News today- தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக தமிழ்நாட்டை விட்டு சொந்த மாநிலங்களுக்கு வெளியேறுவதாகவும் தவறான தகவல் பரவி வந்தது. இந்த வதந்திகள் தமிழ்நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்னை பீகார் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.
எனவே, இதுகுறித்த உண்மை நிலையை கண்டறியும் வகையில் 4 அதிகாரிகள் அடங்கிய குழுவை பீகார் மாநில அரசு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது. அவரகள் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். அங்கு சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து தரப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, நேற்று அந்த குழுவினர் திருப்பூருக்கு வந்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த கூட்டத்தில் பீகாரில் இருந்து வந்த அதிகாரிகளான அம்மாநில ஊரக வளர்ச்சி திட்டச் செயலாளர் பாலமுருகன், பீகார் நூண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அலோக்குமார், போலீஸ் எஸ்.பி சந்தோஷ்குமார் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் எஸ்.பி சஷாங் சாய், பீகாரை பூர்வீகமாக கொண்ட திண்டுக்கல் டி.ஐ.ஜி. அபினவ்குமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் பீகார் குழுவினர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்துறை மற்றும் தொழில்துறையினருடன் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ குறித்தும், தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடத்தினா்.
கூட்டத்தின் முடிவில் பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது,
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று பரவிய வீடியோ தொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகத்தில் முக்கிய அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை கமிஷனர், வருவாய்த்துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், பீகார் அசோசியேஷன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஓட்டல் சங்கத்தினர், கட்டுமான சங்கத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தினோம். இதை தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட, மாநகர காவல்துறை, வருவாய்துறை மற்றும் தொழில்துறையினருடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. சில சம்பவங்களை போலியாக சிலர் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரப்பியது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவை பார்த்த வடமாநில தொழிலாளர்களுக்கு அது உண்மையாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னை குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு தெளிவாக விளக்கி கூறினர். வட மாநில தொழிலாளர்களிடம் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உண்மை நிலையை தெளிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதன் பயனாக தற்போது அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட, மாநகர காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதன் பின்னர் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களது கருத்துகளையும் கேட்டுள்ளோம். பின்னர் அனைத்து விளக்கங்களையும் பீகார் அரசுக்கு சமர்பிக்க உள்ளோம். வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான பிரச்னையில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மிகவும் திருப்திகரமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu