குளம், குட்டை, அணைகளில் வண்டல் மண், கரிசல் மண் எடுக்க, விவசாயிகளுக்கு அனுமதி
Tirupur News. Tirupur News Today- வண்டல் மண் எடுக்க, விவசாயிகளுக்கு அனுமதி (கோப்பு படங்கள்)
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
கூட்டத்தில், விவசாயிகள் கூறியதாவது,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை மற்றும் திருமூர்த்தி அணை, அமராவதி அணை உட்பட்ட பகுதிகளில் வண்டல் மண் எடுக்க 3 மாத காலமாக சங்கத்தின் சார்பாகவும், விவசாயிகள் சார்பாகவும் பல்வேறு மனுக்கள் கொடுத்துள்ளோம். கோடை காலத்தில் மண் எடுத்து நீர்நிலைகளை தூர்வாருவதற்கு பயன்படும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இயற்கை உரமாகவும் பயன்படும். கோவை மாவட்டத்தில் குளம், குட்டைகளில் மண் எடுக்க அனுமதித்துள்ளனர். வேளாண் பொறியியல் துறை அலுவலகம் குளம், குட்டைகளில் மண் எடுக்க காலதாமதம் செய்கின்றனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைக்கும், கேரள மாநிலத்துக்கும் சட்ட விரோதமாக தினமும் லாரிகளில் கிராவல் மண் கடத்தப்பட்டு வருகிறது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம், குட்டை, அணைகளில் வண்டல் மண், கரிசல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.
உடுமலையில் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. உடுமலையில் கொல்லம்பட்டறைக்கு மேல்புறம் அமைந்துள்ள வேளாண்மை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் இடம் உள்ளது. அங்கு வேளாண் பொறியியல் துறை அலுவலகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும். தென்னை மரங்கள் அதிகம் உள்ள உடுமலை பகுதியில் கருந்தலை புழுக்கள் தாக்குதலால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் இடி விழும்போது தென்னை மரங்கள் அதிகம் கருகிவிடும். அதுபோன்ற பாதிப்புகளை ஈடுகட்ட தென்னை மரத்துக்கு பயிர்காப்பீடு செய்யும் வழிமுறைகளை அதிகாரிகள் உருவாக்க வேண்டும்.
நல்லதங்காள் அணைக்கு பொன்னிவாடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இழப்பீடு தொகை உடனடியாக நிர்ணயம் செய்து வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்தாமல் அந்த ஆவணங்களை அரசுக்கு அனுப்பி வைத்து இழப்பீடு தொகை பெற்றுக்கொடுப்பதில் அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர். 20 ஆண்டுகளாக விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். வாரிசுகள் மாறி வரும்போது இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. விரைந்து இழப்பீடு தொகை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு விவசாயிகள் தரப்பில் கூறினர்.
இதைத்தொடர்ந்து இழப்பீடு கோரி 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் வினீத் கூறும்போது, 'கோடை காலமாக இருப்பதால் தற்போது குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம். மழைக்காலம் தொடங்குவதற்குள் பணியை முடிக்க வேண்டும். விரைந்து அனுமதி வழங்க வேண்டும்' என்றார்.
வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் கூறும்போது, 'குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்க 40 மனுக்கள் வந்துள்ளன. 15 மனுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கூட்டத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், கூட்டுறவு இணை பதிவாளர் சீனிவாசன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu