வருமானம் அள்ளித் தந்த ஈரோடு இடைத்தேர்தல்; திருப்பூர் தொழிலாளர்களுக்கு இப்படியும் ஒரு ‘ஜாக்பாட்’

Tirupur news, Tirupur news today- ‘காசு, பணம், துட்டு, மணி, மணி’ - ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம்; தொழிலாளர்களுக்கு கைநிறைய கிடைத்த வருமானம் (கோப்பு படம்)
Tirupur news, Tirupur news today- பனியன் உற்பத்தி நகரமான திருப்பூரில், தமிழகம் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். குறிப்பாக, அருகில் உள்ள மாவட்டங்களான கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தினந்தோறும் பஸ்கள் மற்றும் ரயில் மூலமாக திருப்பூருக்கு வந்து வேலை செய்துவிட்டு செல்கின்றனர்.
பனியன் நிறுவனங்கள், குடோன்கள், விற்பனை அங்காடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் பணியாற்றி வரக்கூடிய சூழ்நிலையில், கடந்த 10 நாட்களாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக தொழிலாளர்கள் சிலர் சென்றனர். இன்று இறுதிகட்ட பிரசாரத்தில் பங்கேற்பதற்காக ஈரோடு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் சென்றனர். இதனால் இன்று திருப்பூரில் உள்ள சில பனியன் நிறுவனங்கள் தொழிலாளர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் உள்நாட்டு பனியன் உற்பத்தியில் சற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது,
கடந்த சில மாதங்களாக திருப்பூரில் வேலை மிக குறைவாக உள்ளது. ஒரு சில நாட்களில் மட்டுமே வேலை செய்கிறோம். சில நாட்களில் திருப்பூர் வந்து மீண்டும் வேலை இல்லாமல் திரும்பி செல்கிறோம். வருமானமின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தோம். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின்பு பல தொழிலாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இறுதிக்கட்ட பிரசாரத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் 3 முதல் 4 நாட்கள் வரை விடுமுறை எடுத்து சென்றனர். திருப்பூரில் ஒரு நாளைக்கு 800 ரூபாய் சம்பளம் கிடைக்கும். ஆனால், ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ.4ஆயிரம் வரை கிடைத்தது, 3 வேளை உணவும் வழங்கப்பட்டது. இதனால் வேலையின்றி தவித்ததற்கு ஒரு வரப்பிரசாதமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமைந்தது, என்றனர்.
பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது,
ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக முற்றிலும் வரவில்லை. தற்பொழுது தொழிலில் மந்தநிலை இருப்பதால் அவர்கள் வராதது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் திருப்பூரில் இருந்து ஆடைகள் தயாரிக்கப்பட்டு ஈரோடு வாரச்சந்தைக்கு அனுப்பப்படும். தேர்தல் விதிமுறைகளால் கடந்த ஒரு மாத காலமாக ஈரோடு வார சந்தைக்கு ஆடைகள் அனுப்புவதில் சிரமம் உள்ளது. இதனால் உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது, என்றனர்.
ஆனால், இன்று மாலையுடன், ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், நாளை மறுதினம் திங்கள் முதல் வழக்கம்போல, திருப்பூருக்கு வருமானம் தேடி வரும் நிலையில், தொழிலாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu