தொல்லியல்துறை அலுவலகத்தை துவங்க, திருப்பூர் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை

தொல்லியல்துறை அலுவலகத்தை துவங்க, திருப்பூர் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை
X

Tirupur News- திருப்பூரில் தொல்லியல் துறை அலுவலகம் துவக்க கோரிக்கை (மாதிரி படம்)

Tirupur News- திருப்பூர் மாவட்டத்துக்கு, தனியாக மாவட்ட தொல்லியல்துறை அலுவலகத்தை துவக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து 6 தாலுகாவை பிரித்து திருப்பூர் மாவட்டம் 2009ல், உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பழமையான கோவில்கள், வரலாற்றுச்சின்னங்கள் அதிக அளவு உள்ளன. குறிப்பாக உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையில், பல்வேறு பழமையான தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சங்க காலத்திலிருந்தே சிறப்பு பெற்றிருந்த கோவில்கள், நொய்யல் மற்றும் அமராவதி ஆற்றங்கரையில் தற்போது வரை வரலாற்றுச்சின்னங்களாக உள்ளன. இக்கோவில்களில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு ஆவணப்படுத்த ப்பட்டுள்ளன.

இதே போல் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலும், வரலாற்று ஆய்வாளர்களால் பெருங்கற்காலத்தைச்சேர்ந்த கல்திட்டைகள் மற்றும் அக்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், பொருட்கள், மேற்பரப்பு ஆய்வில் கிடைத்துள்ளது. கடத்தூர், கொழுமம், கண்ணாடிப்புத்தூர், சோமவாரப்பட்டி, கொங்கல்நகரம், குடிமங்கலம், கோட்ட மங்கலம் உட்பட பல இடங்களில் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளும், கல்திட்டை உட்பட பெருங்கற்காலத்தை சேர்ந்த வரலாற்று சின்னங்களும் உள்ளன.

சமீபத்தில் மடத்துக்குளம் ஒன்றியம், மெட்ராத்தி கிராமத்தில் குளத்தின் கரையில் இருந்த பாறை கல்வெட்டு, போதிய விழிப்புணர்வு இல்லாமல் சிதைக்கப்பட்டு, முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.இதே போல் கல்வெட்டுகளை அழித்தல், நடுகற்கள் மற்றும் சிற்பங்களை சேதப்படுத்துதல் தொடர் கதையாக உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

தற்போது திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட தொல்லியல் சார்ந்த பணிகளில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட தொல்லியல்துறை அலுவலர்களே மேற்கொண்டு வருகின்றனர். எனவே திருப்பூர் மாவட்டத்துக்கு தனியாக மாவட்ட தொல்லியல்துறை அலுவலகத்தை துவக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தொழில்சார்ந்த மாவட்ட மக்களுக்கு, முக்கிய சுற்றுலாத் தலமாகவும், அருங்காட்சியகம் அமைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் தரப்பில் அரசுக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Tags

Next Story