திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- பல்லடம் அருகே பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது

Tirupur News. Tirupur News Today- சிவகங்கையைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகள் காமாட்சி என்கிற கவிதா (வயது 30). இவர் தற்போது பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள அபிராமி நகரில் குடியிருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து தனிமையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்த போது நாகை திருக்குவளை, கொடியளாத்தூரைச் சேர்ந்த அத்தியப்பன் என்பவரது மகன் பிரகாஷ் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது திருப்பூர், வீரபாண்டி சுண்டமேடு பகுதியில் தங்கி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் இருவருக்கும் மில்லில் ஒன்றாக பணிபுரிந்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று பிரகாஷ், காமாட்சி என்கிற கவிதாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு திருமணம் செய்து கொள்வது சம்பந்தமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காமாட்சி என்ற கவிதாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் சத்தம் போடவே உடனடியாக அங்கிருந்து பிரகாஷ் தப்பி ஓடிவிட்டார். சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து உடனடியாக அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த பிரகாஷை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு

பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையத்தில், மளிகை கடை செயல்பட்டு வருகிறது. மளிகை கடைக்கு சீனிவாசன் என்பவர் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சப்ளை செய்த அரிசி மூட்டைகளுக்கு கடந்த ஆறு மாதங்களாக பணம் தராமல் கடைக்காரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் நேற்று மாலை கடன் பாக்கியை கேட்பதற்காக சீனிவாசன் தனது காரில் வந்துள்ளார். கடன் பாக்கி குறித்து கேட்டபோது மளிகை கடைக்காரர்கள் இவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் சீனிவாசன் வந்த காரின் கண்ணாடியை உடைத்து, அவரை தாக்கிதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்துகின்றனர்.

தீக்குளித்த பெண் உயிரிழப்பு; தொழிலாளி கைது

பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை உள்ளது. அந்தக் குட்டை பகுதியில் ஒரு பெண் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார். தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். அது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், தீக்குளித்த அந்த பெண், பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி கலா(47) என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது வீட்டுக்கு கட்டட வேலை செய்ய வந்த பெரும்பாலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(46) என்ற தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது காலம் பேசிப் பழகிய பாலசுப்பிரமணியன் கடந்த சில மாதங்களாக கலாவுடன் பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் வசிக்கும் பெரும்பாலி வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயன்றுள்ளார். அப்போது, ‘எனக்கு குடும்பம் உள்ளது. இனிமேல் நீ என்னை சந்திக்க வர வேண்டாம்,’ என பாலசுப்பிரமணியன் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த கலா, தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியனை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பைக் மோதி முதியவர் உயிரிழப்பு

காங்கேயம் அருகேயுள்ள நத்தக்காடையூர் கோவை - காங்கேயம் ரோட்டில், இரவு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்றார். அப்போது எதிரே மோட்டார் பைக்கில் வந்த ஒருவர் முதியவர் மீது மோதிவிட்டு சென்றுவிட்டார். இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோட்டார் பைக்கில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற நபரை பிடிக்க அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி. கேமரா காட்சி பதிவுகளை, ஆய்வு செய்து வருகின்றனர்.

தண்ணீருக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

முத்தூர், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது30) .வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக உள்ளார். இவருக்கு அஷ்மிதா (4) மற்றும் ஒன்றரை வயதான தர்ஷினிதா என்று 2 மகள்கள் உஇருந்தனர். நேற்று காலை தர்ஷினிதா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, குளியல் அறை அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்து விட்டது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

போலீஸ் ஸ்டேஷன் முன் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

பல்லடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று மாலை தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த காளிராஜன் என்ற வாலிபர் வந்தார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், தான் சிங்காநல்லூரில் வேலை செய்வது வருவதாகவும், தனக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் புகார் கொடுக்க வந்ததாக கூறினார். அதற்கு போலீசார், சிங்காநல்லூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து புலம்பிக் கொண்டே சென்ற அவர், திடீரென்று போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே போலீசார் அவரை மீட்டு காப்பாற்றினர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

புளிய மரத்தில் மோதிய அரசு பஸ்; பயணிகள் காயம்

உடுமலை கொல்லபட்டறை பகுதியில், கோவையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது . இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி பலத்த சேதம் அடைந்தது . பஸ்சில் பயணம் செய்தவர்களில், கோவையை சேர்ந்த முத்துலட்சுமி (வயது56), மதுரையைச் சேர்ந்த அய்யம்மாள் (70), பொள்ளாச்சி சுஜித் (26) ஆகிய மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், நாய் ஒன்று அரசு பஸ் முன்பு குறுக்கே ஓடி வந்ததால் நிலை தடுமாறிய பஸ், புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது . இதுகுறித்து உடுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்