திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு.

Crime News in Tamil -திருப்பூரில் சிறுமியை பாலியல் தொல்லை செய்த வாலிபரை, போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

Crime News in Tamil - 'போக்சோ' சட்டத்தில் வாலிபர் கைது

தாராபுரம் பகுதியை சேர்ந்த குணால் (22), கூலித் தொழிலாளி. இவர் 17 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, கடத்தி சென்று, பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுகுறித்து, பெண்ணின் பெற்றோர், தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தினார்.அப்போது பாலியல் அத்திமீறில் ஈடுபட்ட குணாலை, 'போக்சோ' சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்தனர். குணாலை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, பிறகு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

விபத்தில் சவரத் தொழிலாளி பலி

உடுமலை, பாலப்பம்பட்டி பொதிகை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). சவரத் தொழிலாளி. இவர் உடுமலை கச்சேரி வீதியில் சலூன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ராதாகிருஷ்ணன் கடையை பூட்டி விட்டு மொபட்டில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பாலப்பம்பட்டி அருகே அவர் வலது புறம் திரும்ப முயன்றபோது, பொள்ளாச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ், ராதாகிருஷ்ணன் மீது பலமாக மோதியது. இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட ராதாகிருஷ்ணன் பலத்த காயமடைந்து, அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த உடுமலை போலீசார், ராதாகிருஷ்ணனின் சடலத்தை உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்னி பஸ்சை ஒட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியை சேர்ந்த டிரைவர் முரளிதரன் ( 37) மீது வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

மாடியில் இருந்து குதித்த மாணவி பலி

காங்கயம், ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இவருடைய மகள் ஆனந்தி (18). இவர் படியூரில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். பின்னர் கடந்த ஆகஸ்ட் முதல், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பில் படித்து வந்தார். இந்தநிலையில், இரு தினங்களுக்கு முன், மாலை 4 மணி அளவில், ஆனந்தி திடீரென்று 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தி, கோவை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி, ஆனந்தி இறந்தார். காதல் விவகாரத்தில் தந்தை திட்டியதால் மாணவி மனம் உடைந்து, தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கொத்தனார் கொலை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை

மதுரை மாவட்டம், விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). கொத்தனராக வேலை செய்தார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த அருஞ்சுனை முத்து (22) சித்தாளாக வேலை செய்தார். இவர்கள் இருவரும், பல்லடம் மல்லேகவுண்டன்பாளையத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்தனர். முருகன் ஏற்கனவே திருமணமாகி, மனைவியை விட்டு பிரிந்து வசித்து வந்தார். அருஞ்சுனை முத்துவுக்கு திருமணமாகவில்லை. இந்தநிலையில், கடந்த 23-2-2020 அன்று மாலை முருகனும், அருஞ்சுனை முத்துவும் தாங்கள் வேலை செய்த இடத்துக்கு அருகே அமர்ந்து, மது குடித்தனர். அப்போது முருகன், அருஞ்சுனை முத்துவின் காதல் தோல்வி குறித்து, விமர்சித்து பேசியுள்ளார். இதில் கோபம் அடைந்த அருஞ்சுனை முத்து, கண்டித்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அருஞ்சுனை முத்து, கீழே கிடந்த கல்லை எடுத்து முருகனின் தலை மற்றும் முகத்தில் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பினார். அருகில் இருந்தவர்கள் ரத்த காயத்துடன் கிடந்த முருகனை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அதற்கு முன்பே முருகன் இறந்து விட்டார். இதுகுறித்து, காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருஞ்சுனை முத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அருஞ்சுனை முத்துவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 50). இவர் பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் பிரிவில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி, வேலை செய்து வந்தார். இந்நிலையில் வெளியே கடைக்கு சென்றுவிட்டு, ஓட்டலுக்கு திரும்ப செல்வதற்காக பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வேகமாக வந்த கார், அண்ணாதுரை மீது மோதியது. மோதிய வேகத்தில் பல அடி தூரத்திற்கு அண்ணாதுரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில், மயங்கி கிடந்தார். ஆனால் மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. பலத்த காயமடைந்த அண்ணாதுரை உயிரிழந்தார். இதையடுத்து, பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!