திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்.
3வது மாடியில் இருந்து குதித்த 'நீட்'மாணவி
Tirupur News Today Tamil -காங்கயம், ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இவருடைய மகள் ஆனந்தி (18). இவர் படியூரில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். அதன்பின், கடந்த ஆகஸ்ட் முதல் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில், 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில், தந்தை மணிகண்டன், ஆனந்தி படிக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு வந்து தனது மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தார். 3 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் 2-வது மாடியில் நீட் பயிற்சி மையம் செயல்படுகிறது. பயிற்சி வகுப்பு முடிந்து, பாத்ரூம் செல்வதாக கூறிச்சென்ற ஆனந்தி, திடீரென்று 3-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். 3-வது மாடியில் இருந்து ரோட்டில் விழுந்ததில் ஆனந்திக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்து மணிகண்டன் கதறி அழுதார். ஆம்புலன்ஸ் மூலம், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆனந்தி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்தலை மற்றும் இடுப்பு பகுதியில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினார்கள். மக்கள் நடமாட்டம் மிகுந்த, பரபரப்பான பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 3-வது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
மடத்துக்குளத்தை அடுத்த ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட மேஸ்திரி. இவரது மகன் தீபக் (வயது 12). குமரலிங்கம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவன். நேற்று காலை வீட்டில் இருந்து புத்தகப்பையுடன் பள்ளிக்கு செல்வதாகக் கூறிச் சென்ற தீபக், பள்ளிக்கு செல்லவில்லை. அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் ஜெகதீஸ்வரன், 8-ம் வகுப்பு படிக்கும் நந்தகிஷோர் ஆகியோருடன் சேர்ந்து, மூவரும் அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு குமரலிங்கம் ராமர் கோவில் படித்துறை பகுதியில் தீபக், குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற தீபக், ஆற்றுநீரில் இழுத்துச் செல்லப்பட்டான். இதனை பார்த்த நண்பர்கள் இருவரும் கூச்சலிட்டு, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். அருகில் இருந்தவர்கள், ஓடி வந்து ஆற்றில் இறங்கி தேடியும் தீபக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து குமரலிங்கம் போலீசார் மற்றும் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. .உடனடியாக வந்த தீயணைப்புத்துறையினர் ஆற்றில் இறங்கி தீபக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு தீபக் சடலத்தை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முத்தூர் அருகே அரசு பஸ் சிறைபிடிப்பு
சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து சங்ககிரி, ஈரோடு, அரச்சலூர், நத்தக்காடையூர், காங்கயம், தாராபுரம் வழியாக பழனிக்கு 2 அரசு பஸ்கள் தினமும் இயக்கப்படுகிறது. எடப்பாடியில் இருந்து, பழநி செல்வதற்கு நேற்று அதிகாலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது.இந்த பஸ் நத்தக்காடையூர் அருகே உள்ள செங்குளம்-பழையகோட்டை பஸ் ஸ்டாப்புக்கு நேற்று காலை 8.10 மணிக்கு வந்தது. அப்போது அங்கு பஸ்சுக்காக, பலர் காத்து நின்ற நிலையில், அந்த பஸ் நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், நத்தக்காடையூர் கடைவீதிக்கு விரைந்து வந்து அரசு பஸ்சை சிறை பிடித்தனர். பஸ் டிரைவர், கண்டக்டரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பஸ்சில் காங்கயம், தாராபுரம், பழநி செல்வதற்கு வந்த பயணிகள், அதற்கு பின்னால் வந்த, தனியார் பஸ்சில் ஏறி சென்றனர். தகவலறிந்த காங்கயம் போலீசார், அரசு போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோர் உடனடியாக பொதுமக்களிடம் செல்போனில், சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில் செங்குளம்- பழையகோட்டை பஸ் ஸடாப்பில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க. பெண் நிர்வாகி குஷ்பூ மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் அவர் மீது மகளிர் அணி சார்பாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பா.ஜ.க. மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, பா.ஜ. கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து பா.ஜ.க திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமையில், ஏராளமான பா.ஜ.க.வினர் தாராபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. அரசை கண்டித்தும், தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்தும் கோஷமிட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை தாராபுரம் டிஎஸ்பி தன்ராசு தலைமையிலான போலீசார், கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 34 ஆண்டு சிறை
தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 27-10-2020 அன்று, 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, இதுகுறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயார் தாராபுரம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். மகளிர் போலீசார், 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ஜெயகிருஷ்ணனுக்கு 34 ஆண்டு சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார்.
ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.90 கோடி மோசடி
திருப்பூர் தாராபுரம் ரோடு, செரங்காடு பகுதியில், மளிகைக்கடை வைத்திருந்த குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தீபாவளி பலகார சீட்டு, ஏலச்சீட்டு நடத்தினர். அவர்கள் 18 ஆண்டுகளாக அந்த பகுதியில் சீட்டு நடத்தி வந்ததால், ஏராளமானோர் அவரிடம் சீட்டுப்பணம் கட்டினர். பலகார சீட்டுக்கு ரூ.5,200 செலுத்தினால், தீபாவளி பண்டிகைக்கு முன்பு ரூ.6 ஆயிரம் கொடுத்து பலகாரம் கொடுப்பார்கள். அதன்படி ஒவ்வொருவரும் 10 முதல் 15 வரை பலகார சீட்டுகளை சேர்த்து கட்டினார்கள். அதன்படி மொத்தம் 217 பேர் ரூ.1 கோடியே 3 லட்சத்தை குமாரிடம் செலுத்தியுள்ளனர். மேலும் ஏலச்சீட்டுக்கும் பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 19-ம்தேதி குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர், திடீரென்று தலைமறைவாகினர். அவர்களின் செல்போன் 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.2 கோடியே 90 லட்சத்தை ஏமாற்றிவிட்டனர். அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தருமாறு, பாதிக்கப்பட்ட மக்கள், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி டிரைவர் கொலை; 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 52). நாமக்கல்லில் உள்ள லாரி புக்கிங் நிறுவனத்தில் டிரைவர். இவர் சரக்கு ஏற்றிக் கொண்டு, ஆந்திராவுக்கு லாரியில் சென்றுவிட்டு கேரள மாநிலம் கொச்சி செல்வதற்காக கடந்த 19-9-2018 அன்று இரவு, அவிநாசி பழங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது லாரியின் டயர் வெடித்தது. இதனால் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, உரிமையாளர் வேறு ஒரு டிரைவரை மாற்று டயருடன் அனுப்பி வைத்தார். ஆனால் குமரேசனை அங்கு காணவில்லை. லாரி மட்டும் நின்றது. மறுநாள் அவிநாசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பழங்கரை அருகே உள்ள காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு, குமரேசன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, அவிநாசியை சேர்ந்த சங்கர் (24), அவரது நண்பரான காங்கயத்தை சேர்ந்த தீனதயாளன் (23), மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து குமரேசனை கொலை செய்தது தெரியவந்தது. 'லாரி டயர் வெடித்ததும் குமரேசன் தனது உரிமையாளரிடம் தகவல் தெரிவித்து விட்டு, அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த சங்கர், தீனதயாளன், 15 வயது சிறுவன் ஆகியோர் மது குடிக்க பணம் இல்லாததால், வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டனர். பழங்கரை அருகே நடந்து வந்த குமரேசன், அவர்கள் 3 பேரிடமும் லாரி நிற்கும் இடத்துக்கு லிப்ட் கேட்டுள்ளார். 3 பேரும் சேர்ந்து குமரேசனை மோட்டார் பைக்கில் ஏற்றிக்கொண்டு பழங்கரை காட்டுப்பகுதிக்கு கடத்திச்சென்று அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் சத்தம் போட்டதும், ஏற்கனவே வைத்திருந்த இரும்பு கம்பியால் குமரேசனை தலை உள்ளிட்ட இடங்களில் அடித்து கொலை செய்து விட்டு, அவரிடம் இருந்து செல்போன், ரூ.1,500 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை, திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. சங்கர், தீனதயாளன் இருவருக்கும் கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், வழிப்பறி குற்றத்துக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், ஆள்கடத்தல் குற்றத்துக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்தும் இதை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 15 வயது சிறுவன், இளம் சிறார் என்பதால் தனியாக வழக்கு நடந்து வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu