திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

திருப்பூர் மாவட்ட குற்ற சம்பவங்கள்.

Tirupur News Today Tamil -திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு இடங்களில் நடந்த வாகன விபத்துகளில், நான்கு பேர் உயிரிழந்தனர்.

Tirupur News Today Tamil -மொபட் மீது மோதிய அரசு பஸ்; இருவர் பலி

தாராபுரம் அருகே உள்ள ஆச்சியூரில் தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் சிலர் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, அங்கு வேலை செய்யும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ட்ரூபட் நர்சாரி (வயது 41), ரபிப் நர்சாரி (36), பிரஞ்சாய் நர்சாரி (29) ஆகிய 3 பேரும், ஒரு மொபெட்டில் தாராபுரம் கடைவீதிக்கு வந்தனர். அதன்பின், தாராபுரம்-ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், மீண்டும் தொழிற்சாலைக்கு சென்றனர். இவர்களது மொபட், அமராவதி புது ஆத்துப்பாலத்தை கடந்து சென்ற போது, எதிரே மதுரையில் இருந்து, கோவை நோக்கி வந்த அரசு பஸ், மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் சென்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில், ட்ரூநட் நர்சாரி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிய ரவிப் நர்சாரி மற்றும் பிரஞ்சாய் நர்சாரி இருவருக்கும், தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிப் நர்சாரி உயிரிழந்தார். பிரஞ்சாய் நர்சாரி பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து, தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மொபட் - பைக் மோதல்; இருவர் பலி

குடிமங்கலம் அருகே முகவனூரை சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 85) இவர் மொபட்டில், செஞ்சேரிமலை ரோட்டில் முகவனூரில் இருந்து செங்காட்டுத் தோட்டம் நோக்கி சென்றார். அப்போது எதிரே மோட்டார் பைக்கில் பல்லடத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் நாகராஜ் (26) வந்தார். எதிர்பாராத விதமாக, மொபட் மீது மோட்டார் பைக் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பெருமாள்சாமி, நாகராஜ் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். பெருமாள்சாமி, உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாகராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கெமிக்கல் மருந்தை குடித்த 'குடி'மகன்கள் இருவர் பலி

வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தில், கடல்பாசியில் இருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் தங்கி, வேலை செய்கின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் பகுதியை சேர்ந்த ரவி (வயது 57) , தனது மனைவி ஜோதி (55), மகன் பாலமுருகன் (20) ஆகியோருடன் நிறுவன வளாக குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி, வேலை செய்து வந்தார். அதேபோல், மதுரை வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சிவமுருகன் (53) என்பவரும் இந்த நிறுவனத்தில், கடந்த 2 மாதங்களாக வேலை செய்தார். சிவமுருகனுக்கு, உமாராணி (47) என்ற மனைவி உள்ளார். நண்பர்களான ரவியும், சிவமுருகனும் நேற்று முன்தினம் இரவு, மது அருந்த முடிவு செய்தனர். இதற்காக கம்பெனி அருகே அமர்ந்த அவர்கள், வெள்ளை பாட்டிலில் இருந்த ரசாயனத்தை 'தண்ணீர்' என்று கருதி, மதுவில் கலந்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர்கள் இருவரும், கூச்சலிட்டனர். ரவி தனது மகன் பாலமுருகனிடம், நடந்த விவரத்தை கூறினார். உடனே பாலமுருகன் தனது கம்பெனி உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள், அவர்கள் இருவரையும் முத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வாலிபர் கொலை வழக்கில், இரண்டு பேருக்கு இரட்டை ஆயுள்

திருப்பூர், சிவசக்தி நகர் வேப்பங்காடு தோட்டம் அருகில் உள்ள முள்காட்டில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் (வயது 22) என்பவர், கடந்த 7-4-2018 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த முருகன் (33), அவரது உறவினர் பெருமாள் (32) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது, விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை, திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. முருகன், பெருமாள் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!