திருப்பூர் மாவட்டத்தில், மகளிர் உரிமை திட்டத்தில் 3.59 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு; அமைச்சர் தகவல்
Tirupur News,Tirupur News Today- மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு மையங்களில் நேற்று, அமைச்சர் மு.பெ சாமிநாதன் ஆய்வு செய்தார்.
Tirupur News,Tirupur News Today- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பதிவு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது,
திருப்பூர் மாவட்டத்தில், மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக நடந்த முகாம்களுக்கு, கடந்த 20ம் தேதி முதல் 23 ம் தேதி வரை 4 நாட்கள் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த 24ம் தேதி முதல் தொடங்கி 4 ம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 ஊராட்சிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடந்து வருகிறது. முதல்கட்டமாக 3,59,315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகளில் 8,18,344 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 827 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 5,34,460 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக, 308 ரேஷன் கடைகளுக்குட்பட்ட 2,83,884 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள், வருகிற 5ம் தேதி முதல் 16 ம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், 6 நகராட்சி பகுதிகளிலுள்ள 147 வார்டுகளிலும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்குட்பட்ட 233 வார்டுகளிலும், விண்ணப்ப பதிவு முகாம்கள் நடக்க உள்ளது.
இந்த விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகில் உள்ள அரசு அலுவலக கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் நடத்தப்படும். எனவே, அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu