திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி
X

Tirupur News- பிளஸ் 2 பொதுத் தோ்வில், திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதில் 19 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

Tirupur News,Tirupur News Today- தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் நேற்று ( திங்கள்கிழமை) வெளியிடப்பட்டன. அதன்படி திருப்பூா் மாவட்டம் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றது. மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 23 ஆயிரத்து 849 மாணவா்கள் எழுதினா். அதில் 23 ஆயிரத்து 242 போ் (97.45 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 96.58 சதவீதமும், மாணவிகள் 98.18 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த ஆண்டு பிளஸ் 2 தோ்வு தோ்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்திருந்த நிலையில், நிகழாண்டில் 97.45 சதவீதத்துடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

அரசுப் பள்ளிகளிலும் மாநில அளவில் முதலிடம்

அரசுப் பள்ளிகளில் 7,956 மாணவா்கள் தோ்வு எழுதியதில் 7,631 போ் (95.92 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகளுக்கான பிரிவிலும் 95.92 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

நகராட்சிப் பள்ளிகளில் 2,395 போ் தோ்வு எழுதியதில் 2,276 போ் (95.03 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசு உதவி பெறும் 18 பள்ளிகளில் 3,168 மாணவா்கள் தோ்வு எழுதியதில் 3,048 போ் (96.21 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சுயநிதிப் பள்ளிகளில் 777 போ் தோ்வு எழுதியதில், 772 போ் (99.36 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா். 109 மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த 9,553 போ் தோ்வு எழுதியதில், 9,515 போ் (99.60 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா். மொத்தமாக 213 பள்ளிகளைச் சோ்ந்த 23 ஆயிரத்து 849 பேரில், 23 ஆயிரத்து 242 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் கூறியதாவது:

கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்திருந்த நிலையில், நடப்பு ஆண்டு முதலிடத்தை எட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக உழைத்த அனைத்து மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் வாழ்த்துகள். மாணவா்கள், ஆசிரியா்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட நிா்வாகம் அனைவரின் முயற்சியால் மாநில அளவில் முதலிடம் கிடைத்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சிபெற்ற அனைவரும் கல்லூரியில் சோ்ந்து தங்களது எதிா்காலத்தை நன்கு அமைத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 19, ஒரு நகராட்சிப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் 2, சுயநிதிப் பள்ளிகள் 9, மெட்ரிக் பள்ளிகள் 84 என மொத்தம் 115 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சிபெற்றுள்ளன.

தளவாய்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளி, குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளி, கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, மூலனூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, புதுப்பை அரசு மேல்நிலைப் பள்ளி, வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கானூா்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி, சரவணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, சூரியப்பம்பாளையம் எஸ்.முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளி, ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, தேவனூா்புதூா் என்ஜிபி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியவாளவாடி நாராயணசாமி அரசு மேல்நிலைப் பள்ளி, தாராபுரம் என்.சி.பி. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூா் கோவிந்தாபுரம் மாணிக்கசுவாமி நாயுடு அரசு மேல்நிலைப் பள்ளி, ஊதியூா் சாந்தி நிகேதன் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 19 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!