‘நான் 10ம் வகுப்பில், பெயில் ஆனேன்; இப்போது திருப்பூருக்கு கலெக்டர்’ - தற்கொலைக்கு முயன்ற மாணவருக்கு தைரியம் சொன்ன கலெக்டர்

‘நான் 10ம் வகுப்பில், பெயில் ஆனேன்; இப்போது திருப்பூருக்கு கலெக்டர்’ - தற்கொலைக்கு முயன்ற மாணவருக்கு தைரியம் சொன்ன கலெக்டர்
X

Tirupur News. Tirupur News Today- பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ்.

Tirupur News. Tirupur News Today- நான் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் பெயில் ஆனேன். ஆனால், தொடர்ந்து முயன்று படித்து, இன்று திருப்பூருக்கு கலெக்டராக இருக்கிறேன், என பல்லடத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ், தற்கொலைக்கு முயன்ற மாணவருக்கு ஊக்கமும், தைரியமும் அளித்தார்.

Tirupur News. Tirupur News Today- பல்லடம் அரசு மருத்துவமனையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவரையும் அழைத்து பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவோரை, நேரில் சென்று சந்தித்து விசாரித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது மருத்துவமனையில், பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வருவதாக கலெக்டரிடம், டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த மாணவரை சந்தித்த கலெக்டர், மாணவரை ஊக்கப்படுத்தும் வகையில் அறிவுரை வழங்கினார்.

‘நான் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடைந்து, அதன்பிறகு படித்து இப்போது நல்ல வேலையில் இருக்கிறேன். நான் இந்த மாவட்டத்தின் கலெக்டர். அந்தளவுக்கு படித்து, இந்த இடத்துக்கு வந்துள்ளேன். தேர்வில் தோல்வி, வெற்றி என்பது மிகப்பெரிய விஷயம் அல்ல. தோல்வி அடைந்தாலும் அதில் இருந்து மீண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவது தான் முக்கியம். இது ஒரு தேர்வு மட்டுமே. தோல்வியால் சோர்வடைய கூடாது.

தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு உள்ளது. அதில் எழுதி பலர் தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால் நீ தேர்வில் தோல்வி அடையவில்லை. மதிப்பெண் குறைவாக எடுத்ததற்கு இப்படி தற்கொலை முயற்சி செய்திருக்கக் கூடாது. நாங்கெல்லாம் பெயிலாகி அதன்பிறகு அடுத்தடுத்து முன்னேறி வந்துள்ளோம். மதிப்பெண் குறைந்து விட்டதற்கு வருத்தப்படக்கூடாது. மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். உனக்கு எந்த குரூப் பிடிக்கிறதோ அந்த குரூப்பை தேர்வு செய்து படி. 10-ம் வகுப்பு தேர்வில் விட்ட மதிப்பெண்ணை, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதித்துக்காட்ட வேண்டும். பிளஸ்-2 தேர்வில் நீ பெற்ற மதிப்பெண்ணை உனது பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களிடம் தெரிவித்து விட்டு எனக்கும் செல்போனில் தெரிவிக்க வேண்டும். அதுபோன்ற நிலை உனக்கு நிச்சயம் வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள், என்றார்.

மாணவனின் அருகில் நின்று நிதானமாக அறிவுரை வழங்கிய கலெக்டரின் செயல் அங்கு இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பல்லடம் அரசு மருத்துவமனையில் சுகாதார வளாக வசதி இல்லாததால் பஸ் நிலையம் வரை நோயாளிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், சித்தா பிரிவு அறை இருக்கும் இடத்திற்கு வழிகாட்டி பதாகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!