அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு உதவுங்கள் - தனியார் நிறுவனங்களுக்கு திருப்பூர் கலெக்டர் வேண்டுகோள்
Tirupur News- அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவுங்கள் - கலெக்டர் வேண்டுகோள் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு தனியாா் நிறுவனங்கள் பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
திருப்பூா்வ ஆட்சியா் அலுவலகத்தில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின்கீழ் தனியாா் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் பள்ளிகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு பங்களிப்பு வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது,
உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் தரத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் பள்ளிகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு தனியாா் பங்களிப்பை வழங்கும் முன்னோடி திட்டமான ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி‘ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அனைத்து நிலையில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் தரமான கல்வி கிடைத்திடும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, தனியாா் பங்களிப்புடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் 1,331 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் தனியாா் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடை பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
மாவட்டத்தில் உள்ள எந்தப் பள்ளிக்கு என்ன வசதிகள் தேவை என்கிற விவரம் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதியுதவி செய்ய விரும்பும் நிறுவனங்கள் தங்களால் என்ன விதமான வசதிகளை பள்ளிக்கு ஏற்படுத்தித் தர முடியும் என்பதை அறிந்து அதற்கேற்ற தங்களது பங்களிப்பை வழங்கலாம்.
மாவட்டத்தில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டம் தொடா்பான விவரங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக உதவித் திட்ட அலுவலரை (அண்ணாதுரை) 94438-56934, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளரை (தனலட்சுமி) 88387-99374, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரை (கெரோலீன்) 90804-41057 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.
இதேபோல,அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தனியாா் தொழில் நிறுவனங்கள் தங்களது சமூகப் பங்களிப்பு நிதியை வழங்கலாம். அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சமூகப் பங்களிப்பு நிதி வழங்க பொறுப்பு அலுவலா் மருத்துவா் மரு.அருண்பாபுவை 99949-94944 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம், என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, பொதுமேலாளா் (மாவட்ட தொழில் மையம்) ராமலிங்கம், இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) கனகராணி, இணை இயக்குநா்கள் (தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) வி.புகழேந்தி, வி.எஸ்.சரவணன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம், அச்சுக்கூடம் உரிமையாளா்கள் சங்கம், கல்குவாரி உரிமையாளா்கள் சங்கம், அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கம், ரோட்டரி சங்கம், திருப்பூா் பின்னலாடை உற்பத்தியாளா் சங்கம், உணவு எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu