திருப்பூர் மாநகராட்சியில் வீடுவீடாகச்சென்று கொரோனா விவரம் சேகரிப்பு

திருப்பூர் மாநகராட்சியில் வீடுவீடாகச்சென்று  கொரோனா விவரம் சேகரிப்பு
X

திருப்பூர் மாநகராட்சி பகுதியில், வீடு வீடாகச் சென்று கொரோனா பாதிப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

திருப்பூர் மாநகராட்சி பகுதியில், வீடுவீடாகச் சென்று, கொரோனா பாதிப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், பல வீடுகள் பூட்டப்பட்டுள்ளன.

தமிழக அளவில் கொரோனா பரவலில் அதிகம் உள்ள மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டமும் ஒன்றாக உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தினசரி 1700 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் சராசரி 20 நபர்கள் வரை பலியாகி வருகின்றனர்.

கொரோனா பவரல் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, கூடுதல் அதிகாரியாக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார். அதோடு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். கொரோனா நோய்த்தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகமும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி முழுவதும் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, மாநகராட்சி பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வீடுவீடாகச் சென்று கதவு எண், பெயர், வயது, பாலினம், செல்போன் எண், காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலி, வாசனை உணர்வற்று போதல், வயிற்று போக்கு, உடல் சோர்வு, தலைவலி, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, இருதய நோய், சீறுநீரக நோய், நீண்ட நாள் சிகிச்சை இருப்பவர், தினமும் வெளியூர் சென்று பணிபுரிந்து வருபவரா, வேறு மாவட்டத்தில்இருந்து வந்தவர் விவரம், உடல் வெப்பநிலை, தடுப்பூசி முதல், இரண்டாம் விவரம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களில் பெரும்பாலானவர்கள் வெளியூர் தொழிலாளர்கள். அவர்கள் வீடுகளை காலி செய்தோ, அல்லது பூட்டிவிட்டோ சொந்த ஊருக்கு சென்றுள்ளதால், பல வீடுகளில் விவரம் சேகரிக்க முடியாமல் அலுவலர்கள் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து பணியாளர்கள் கூறுகையில், பின்னலாடையில் நகரம் என்பதால், திருப்பூரில் தொழில் ரீதியாக வேலைக்கு வந்து தங்குவோரின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேல் உள்ளது. கொரோனா முழு ஊரடங்கு காரணமாக, தங்கள் சொந்து ஊருக்கு பலரும் சென்று விட்டதால், ஆயிரக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன. இதனால் விவரம் முழுமையாக சேகரிக்க முடியாத நிலை உள்ளது என்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!