ஏடிஎம் இயந்திரம் கொள்ளை: தடவியல் நிபுணர்கள் ஆய்வு
திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வங்கி ஏடிஎம் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஏடிஎம் மையத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் பெருந்துறை அருகே கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தை பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் விட்டுவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை மாற்றும் வண்டியில் எடுத்துச் சென்று உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட போது கடந்த 19ஆம் தேதி இயந்திரத்தில் 15 லட்சம் ரூபாய் வைத்ததாகவும் நேற்றைய தினம் வரை குறைந்த பட்சமாக ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்தபோது 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து நான்கு சக்கர வாகனத்தில் கயிற்றைக் கட்டி ஏடிஎம் எந்திரத்தை வாசல் வரை கொண்டு வந்து பின்பு வாகனத்தில் ஏற்றி சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் ஏடிஎம் இயந்திரத்தின் கதவுகள் மற்றும் வாசல் ஆகியவை சேதமடைந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கும்போது, திருப்பூர் ஈரோடு செல்லும் முக்கிய பிரதான சாலையாக இருந்து வரக்கூடிய இப்பகுதியில் வங்கி செயல்பட்டு வருவதாகவும் ஆனால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் வங்கி நிர்வாகம் சார்பில் சரிவர மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த இரண்டு வருடமாக இந்த வங்கிக்கு இரவு நேரக் காவலர்கள் நியமிக்கப்பட வில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள சூழ்நிலையில் ஆங்காங்கே பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் போது கூட கொள்ளை சம்பவம் நிகழ்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu