தடுப்பூசி 100% தொழிலாளர்களுக்கும் போடப்பட வேண்டும்: திருப்பூர் எம்பி வலியுறுத்தல்

இது தொடர்பாக, திருப்பூர் எம்பி., சுப்புராயன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை, திருப்பூர், ஈரோடு ஆகியன சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மிகுந்த மாவட்டங்களாகும். இம்மாவட்ட தொழிற்சாலைகளில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், வட மாநில தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இங்கு, 100 சதவீத தொழிலாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகள் இயங்கலாம் என்ற அரசின் அறிவிப்புக்குப் பின்னர், வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் ரயில்கள் மூலமாக இந்த மாவட்டங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இவர்களில் யாராவது ஒருவருக்கு கொரோனா தொற்று நோய் இருந்தால் அவர் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நோய்பரவும்; பொதுமக்களுக்கும் எளிதில் பரவும்.
எனவே, தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமலும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கும், அரசு போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் செய்து தடுப்பூசிகள் போட வேண்டும்.
தொழிற்சாலைகளில் உடல் வெப்பநிலையைக் கண்டறியும் கருவிகள் வைத்து தினசரியும் பரிசோதனை செய்ய வேண்டும். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு அங்குள்ள மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகள் ஒதுக்குவதோடு, கூடுதலாக வெளிமாநில, மாவட்ட தொழிலாளர்களுக்காக தேவையான அளவு தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கு உரிய பணியாளர்கள் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்து, 100 சதவீத தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகள் போடுவதை உறுதிப்படுத்த வேண்டும், என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu