அலட்சியம் ஆபத்தை தரும்! திருப்பூர் நகரில் அதிகரிக்கும் வாகனப்போக்குவரத்து

அலட்சியம் ஆபத்தை தரும்! திருப்பூர் நகரில் அதிகரிக்கும் வாகனப்போக்குவரத்து
X
நிறுவனங்கள் இயங்க அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளது. இது, கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்குமோ என்ற கவலை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமிருந்த மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் ஒன்றாகும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்ததன் பலனாக, தொற்று பரவல் எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் சென்றது. தொற்று எண்ணிக்கையை மேலும் குறைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, தொழில் நகரான திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில், சேம்பிள் உற்பத்தி செய்வதற்கு மட்டுமே 10, சதவீத பணியாளர்களுடன் இயங்க, தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும்.

மேலும், இ-பாஸ் அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே நிறுவனங்களுக்கு செல்ல முடியும். அத்துடன், இவற்றை கண்காணிக்க 13, வருவாய் துறையினர் கொண்ட கண்காணிப்பு குழு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. விதியை மீறும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில், திருப்பூரில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்று வழக்கத்தை விட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. குமரன் ரோடு உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் செல்வதை பார்க்கும் போது, திருப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

திருப்பூரில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், சிறிதும் அச்சமின்றி பொதுமக்கள் மீண்டும் நடமாடத் தொடங்கி இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. இன்னும் சில நாட்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் வீட்டில் இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீளமுடியும்; அதன் மூலம் திருப்பூர் அதன் இயல்புநிலைக்கு திரும்பும் என்பதே உண்மை.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!