திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் பெண்ணுக்கு நேர்ந்த அவமரியாதை; போலீசார் விசாரணை
Tirupur News- திருப்பூரில் பெண்ணை அவமரியாதை செய்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜா் சாலையில், திருப்பூர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள டீக்கடை முன்பாக அமா்ந்திருந்த பெண் மீது, ஆவின் பால் கடைக்காரர் ஒருவர் தண்ணீா் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
ஏற்கனவே கடைக்கு வெளியே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நிலையில், கடையின் வழித்தடத்தில் அமா்ந்திருந்ததாக குற்றம்சாட்டி அந்த பெண்ணின் மீது தண்ணீா் ஊற்றியது மட்டுமில்லாமல், அப்பெண்ணை அவமரியாதையாகவும் கடை ஊழியர்கள் பேசி உள்ளனா்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடா்ந்து, மாநகராட்சி உதவி ஆணையா் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடையின் முன் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடைக்கு 'சீல்' வைத்தனா்.
மேலும் திருப்பூர் தெற்கு போலீசார் கடையின் டீ மாஸ்டர் அனில்குமார், ஊழியர் வெங்கடேஷ் ஆகிய 2பேர் மீது, பொது இடத்தில் பெண்களை அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துக் கட்டப்பட்ட திருப்பூர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், பெரும்பாலும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. நடைபாதைகளை மறித்தும், ஆக்கிரமித்தும் பல கடைகளின் முன்னால் பொருட்கள், விற்பனை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்போது மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் ஆய்வு நடத்தி அகற்றினாலும் அடுத்த சில தினங்களில் அதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் தொடரும். இந்த நிலை நீண்டகாலமாக நீடிக்கிறது.
அதே போல் திருப்பூர் பல்லடம் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து, உழவர் சந்தை பகுதி வரை, அதாவது தென்னம்பாளையம் பிரிவு பல்லடம் ரோட்டில் இருபுறமும் காலை முதல் மாலை வரை ரோட்டோர கடைகள் அதிகளவில் செயல்படுகின்றன. ரோட்டில் வாகனங்கள் வரமுடியாத அளவுக்கு, ரோடுகளை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். தவிர அந்த கடைகளுக்கு பழங்கள், காய்கறிகளை கொண்டு வரும் வாகனங்களும் காலை நேரங்களில் நடுரோட்டில் நிறுத்தப்படுகின்றன. அதுவும் மணிக்கணக்கில் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து, விபத்துகளை ஏற்படுத்துகின்றன. நிரந்தரமாக இந்த பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட இந்த கடைகள் இருப்பதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu