திருப்பூரில் ‘கோவிந்தா’ கோஷத்துடன் வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம்; வடம் பிடித்த பக்தர்கள் பரவசம்
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் இன்று வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கருட வாகனத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ் மற்றும் கவுன்சிலர்கள் சாமிக்கு சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்தனர். மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பெண் கவுன்சிலர்கள் தாம்பூலத்தில் சீர்வரிசை பொருட்களை வைத்து ஊர்வலமாக வந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் மேளதாளங்கள் முழங்க அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மேயர், ஆணையாளர், துணை மேயர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மேயர் தினேஷ்குமார் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர். கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க, இசை வாத்தியங்கள் இசைக்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.
தேரின் முன் பெண்கள் கும்மியாட்டம், கோலாட்டம் ஆடிச்சென்றனர். கொங்கு பண்பாட்டு மையம் சார்பில் பெருஞ்சலங்கை ஆட்டம் மற்றும் காவடி ஆட்டம் நடைபெற்றது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடக்கிறது.
நேற்று, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ‘நமசிவாய, நமசிவாய’ கோஷம் ஒலிக்க, தேரை வடம்பிடித்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu