புதுவெள்ளமாக நுரையுடன் வந்த திருப்பூர் நொய்யல் ஆறு
Tirupur News-புதுவெள்ளமாக நுரையுடன் காணப்படும் நொய்யல் ஆறு.
Tirupur News,Tirupur News Today- நொய்யல் ஆறு கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 165 கி.மீ., தூரம் பயணித்து காவிரியில் கலக்கக் கூடிய ஆறு ஆகும். இந்த ஆறு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சாக்கடை நீர் கழிவுகளாலும், திருப்பூரின் சாயக்கழிவு நீராலும் மாசடைந்து வந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. புது வெள்ளம் பெருகி நொய்யல் ஆற்றில் வழிந்தோடுகிறது. திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை பகுதியில் இந்த மழை வெள்ளமானது ஆர்ப்பரித்து பொங்குகிறது. இதனால் நல்லம்மன் கோவில் தண்ணீரில் மூழ்கி வருகிறது. கோவிலுக்கு செல்லக் கூடிய சிறு பாலம் துண்டிக்கப்பட்டு கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நொய்யல் ஆற்றில் நுரை சூழ்ந்து வெண்மையாக பனிமலை போல காணப்படுகிறது. அந்த பகுதி முழுக்க நுரையால் சூழ்ந்து உள்ள நிலையில், ஆற்றங்கரையில் உள்ள சாய, சலவை பட்டறைகள் சுத்திகரிக்காத சாய நீரை ஆற்று வெள்ளத்தில் கலப்பதால் தான் இது போல பெருமளவு நுரை உருவாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மங்கலம், வெள்ளஞ்செட்டிபாளையம், ஆண்டிபாளையம், பாரப்பாளையம் மற்றும் திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள சாய, சலவைப்பட்டறைகள் நேரடியாக குழாய்களை அமைத்து ஆற்றில் கழிவு நீரை கலப்பதாகவும், மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் துளிகூட சுத்திகரிக்காத சாயக்கழிவு நீரை அப்படியே திறந்து விடுவதால்தான் ஆள் உயரத்துக்கு நுரை ஏற்படுவதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாய, சலவைப்பட்டறைகள் நேரடியாக ஆற்றுக்கு தண்ணீர் செல்வதற்கு அமைத்துள்ள குழாய்களை அகற்ற வேண்டும் எனவும், தொடர்ச்சியாக சாயக்கழிவு நீர் கலப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu