திருப்பூரில் 3 மாதங்களாக மாறாத நூல் விலை; பனியன் தொழில்துறையினர் ‘அப்பாடா’

tirupur News, tirupur News today- திருப்பூரில் இந்த மாதமும், நூல் விலையில் மாற்றம் இல்லை. (கோப்பு படம்)
tirupur News, tirupur News today- திருப்பூரில் கடந்த 3 மாதங்களாக நூல் விலை உயராமல், ஒரே விலையில் நீடிப்பது, பனியன் தொழில்துறையினரை நிம்மதியடைய செய்துள்ளது.
பனியன் தொழில் நகரான திருப்பூரில் பருத்தி ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பனியன் உற்பத்திக்கு பருத்தி நூல் முக்கிய மூலப்பொருளாகும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைத்ததும் பனியன் உற்பத்தியாளர்கள் மொத்தமாக நூல் எடுத்து ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நூல் விலை மாதந்தோறும் 1-ம் தேதி நூற்பாலைகள் அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
நூல் விலை உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களின் அடிப்படையில் ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நூல் விலை அபரிமிதமாக உயர்ந்ததால் புதிய ஆர்டர் எடுத்து செய்வதில், பனியன் உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டினா். பனியன் தொழில் மந்த நிலையை அடைந்தது. அதன்பிறகு நூல் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருப்பதால் பனியன் ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது.
தீபாவளிக்கு சில மாதங்களுக்கு முன்பே, பனியன் நிறுவனங்களில் உற்பத்தி கணிசமாக குறைந்த நிலையில், தீபாவளிக்கு பிறகு பல பனியன் தொழிற்சாலைகள் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. புதிய ஆர்டர்கள் இல்லாததால், நூறு தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில், 40 பேர் மட்டுமே வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. சொற்ப எண்ணிக்கையில் தொழிலாளர்களை கொண்டு செயல்பட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சிறு யூனிட்டுகள் முற்றிலும் முடங்கிப் போனது.
இந்நிலையில், நூல் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாதது, மீண்டும் தொழில் துறையை உயிர் பிடிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில், நேற்று ஏப்ரல் மாதத்துக்கான நூல் விலை அறிவிக்கப்பட்டது. கடந்த மாத நூல் விலையே தொடரும் என்று நூற்பாலைகள் அறிவித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் மாற்றமில்லை. மார்ச் மாதத்துக்கான நூல் விலையும் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக 3 மாதங்களாக, நூல் விலையில் மாற்றமில்லாமல் ஒரே விலையில் உள்ளது. இது பனியன் தொழில்துறையினரை நிம்மதியடைய செய்துள்ளது. புதிய ஆர்டர்களை தயக்கமின்றி எடுத்து செய்ய உதவும் என்றும், தெரிவித்துள்ளனர்.
அதன்படி ஒரு கிலோ கோம்டு ரகம் 20-ம் நம்பர் நூல் ரூ.255-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும் விற்பனையானது. செமி கோம்டு நூல் 20-ம் நம்பர் ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ.255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ.285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் நூல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu