திருப்பூர் பனியன் உற்பத்தியில் மறுசுழற்சி முறை; அமெரிக்க சந்தையை வசப்படுத்த முயற்சி
Tirupur News. Tirupur News Today- அமெரிக்காவில் நடைபெற உள்ள மேஜிக் ஆடைக் கண்காட்சியில் பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், திருப்பூரில் ‘பியோ’ தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது.
Tirupur News. Tirupur News Today- அமெரிக்கா லாஸ் வேகாஸ் நகரில் மேஜிக் ஆடைக் கண்காட்சி வருகிற ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு நடக்கிறது. இந்த கண்காட்சியில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பங்கேற்கும் வகையில், கருத்தரங்கு நேற்று திருப்பூர் அருகே உள்ள ஓட்டல் அரங்கத்தில் நடைபெற்றது.
‘பியோ’ தலைவரும், ஏ.இ.பி.சி.யின் தென் மண்டல பொறுப்பாளருமான சக்திவேல் தலைமை வகித்து பேசியதாவது,
பின்னலாடை தயாரிப்பு மையமாக திருப்பூர் விளங்கி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக மறுசுழற்சி செய்யக்கூடிய ஆடை தயாரிப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தங்கள் சந்தை யுக்தியை மாற்றி, விளையாட்டு ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ தொழில்நுட்பத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்றாலை மின்சாரம், சூரியஒளி மின்சாரம் தயாரித்து பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து நிலைத்தன்மை நடைமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுகின்றனர். பசுமை ஆற்றலை பயன்படுத்துகின்றனர்.
அமெரிக்க பையர்கள் நெய்த ஆடைகளுக்கு ஆர்டர் கொடுப்பதுதான் வழக்கமாக இருந்தது. தற்போது அவர்கள் மனதை மாற்றியுள்ளனர். பின்னலாடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அமெரிக்க சந்தையை வசப்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் நடக்கும் கண்காட்சியில் பையர்கள் வருவார்கள். ஏ.இ.பி.சி., பியோ சார்பில் 150-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர். கண்காட்சிக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இந்த கண்காட்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சி ஆணையத்தின் சர்வதேச விற்பனை இயக்குனர் பாப் பெர்க் பேசும்போது, 'இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அமெரிக்காவில் தற்போது மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. அமெரிக்க சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நன்மைகள் நிறைந்துள்ளன. நிலையான, மறுசுழற்சி செய்யும் தயாரிப்புகள் மூலமாக அமெரிக்க சந்தையை வசப்படுத்த முடியும்' என்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசும்போது, 'அமெரிக்க சந்தையின் சாத்தியக்கூறுகள் மூலமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்பார்கள்' என்றார். ஏ.இ.பி.சி. ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்குனர் ஹரிகிருஷ்ணன், அமெரிக்க கண்காட்சியில் பங்கேற்பு கட்டணம் மற்றும் பிற வசதிகள் குறித்து விளக்கினார்.
இந்த கருத்தரங்கில் ஏ.இ.பி.சி.யின் செயற்குழு உறுப்பினர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu