‘ஆரோக்கியமாக வாழ, சிறுதானிய உணவுகளை சாப்பிடுங்க’ - திருப்பூரில் அமைச்சர் அறிவுறுத்தல்

tirupur News, tirupur News today- திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த சிறுதானிய உணவு பெருவிழாவில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் மாணவிகளுக்கு பரிசு வழங்கினா்.
திருப்பூர் அனைவரும் ஆரோக்கியமாக வாழ சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று திருப்பூரில் நடந்த சிறுதானிய உணவு பெருவிழாவில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.
சிறுதானியங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர், வேளாண்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதன்தொடர்ச்சியாக திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் சீர்மிகு சிறுதானிய உணவு பெருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினா்.
திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது,
மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு முக்கியம். அந்த உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். அதற்கு சிறுதானியம் ஊட்டச்சத்தை தரக்கூடிய வகையில் மிகுந்த சத்துள்ளதாக உள்ளது. சிறுதானியத்தை உற்பத்தி செய்கிற நானும் ஒரு விவசாயி மகன் தான். கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். இதை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். இவை அதிக ஆற்றலை தரக்கூடியது. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதசத்து, நார்ச்சத்து மிகுந்தது. சிறுதானிய உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் ஒரு குடும்பம் ஆரோக்கியமாக அமையும். அனைவரும் சிறுதானிய உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் மாநகராட்சி மண்டல தலைவர் இல.பத்மநாபன், மருத்துவர் சிவராமன், செயிண்ட் ஜோசப் கல்லூரி செயலாளர் குழந்தை தெரசா, முதல்வர் மேரிஜாஸ்பின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறுதானியங்களின் முக்கியத்துவம்
இயற்கையோடு இணைந்து வாழ்வதே நம் எதிர்காலம் என்று ஆகிவிட்டது. அதற்கு நமக்கு துணையாக இருப்பவை சிறுதானியங்கள். கடந்த தலைமுறையில் நம் உணவு முறையிலும், உணவுப் பொருட்களிலும் ஏற்பட்ட மாற்றம், நமது ஆரோக்கியத்தையும் ஆயுளையும் சுருக்கிவிட்டது. மனிதனின் சராசரி ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலத்தில் இயற்கையான உணவுகளை தேடி போகும் நேரம் வந்துவிட்டது. டிபார்ட்மென்ட் ஸ்டார் முதல் ஆன்லைன் வரை என எங்கு பார்த்தாலும் தினை, தானியம் என இயற்கை சார்ந்த பொருள்கள் தான் வரிசைகட்டி நிற்கின்றன. சிறுதானியங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.
கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவையே சிறுதானியங்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும். இவைகள் மிகக் குறுகிய காலத்தில் வறட்சி நேரத்திலும் வளரக்கூடியவை ஆகும். இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன.
எளிதில் ஜீரணமாகக்கூடிய தன்மைகொண்டவை. இந்நிலையில் இந்த தானியங்கள் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது, அனீமியா நோய் வருவதை தடுக்கிறது என சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். சிறுதானியங்கள் 13.2 சதவீதம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது. இதனால் நாம் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவில் சிறுதானியங்கள் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu