போதிய பஸ்கள் இயக்கப்படாததால் ஆவேசம்; கோவில் வழி பஸ் ஸ்டாண்டில் மக்கள் சாலைமறியல்
Tirupur News. Tirupur News Today- அதிகாலை 2 மணியளவில், மறியலில் ஈடுபட்ட மக்கள்.
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் கோவில் வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல போதியபஸ் இயக்கப்படாததால் திருப்பூர் பொதுமக்கள், சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. நள்ளிரவு நேரங்களில் பயணிகள் மிக குறைந்த அளவே இருப்பதால், பஸ்கள் இயக்குவது நிறுத்தப்படுகிறது.
வார நாட்களில் கூட்டம் இல்லாத நிலையில், வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் வருவதால், அனைத்து பஸ்களும் நிரம்பியே செல்கிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் திங்கட்கிழமை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல ஏராளமானோர் திருப்பூர் கோவில் வழி பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். இதனால் தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் பயணிகள் வந்தால், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் குண்டம் திருவிழா நடைபெற்றதால், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை, இந்த கோவிலுக்கு சிறப்பு பஸ்களாக போக்குவரத்து அதிகாரிகள் மாற்றி, அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் பஸ் பற்றாக்குறை ஏற்பட்டு கோவில் வழி பஸ் ஸ்டாண்டில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் இல்லாமல் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பயணிகள் நேற்று அதிகாலை 2 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நல்லூர் போலீசார், அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
வார இறுதி நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இப்போது, பணிகள் முழுமையடைந்து புதுப்பொலிவுடன், விரிவுபடுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்டாக, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடந்த மூன்று ஆண்டுகளும், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் மட்டுமே, தென்மாவட்டங்களுக்குச் செல்ல முக்கிய பஸ் ஸ்டாண்டாக செயல்பட்டது. இப்போதும் அப்படியே உள்ளது.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பழனி, திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும், கோவில்வழி பஸ் ஸ்டாண்டுக்கு சென்றுதான், செல்கின்றன. எனினும், தென்மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதியை கவனத்தில் கொண்டு, வார இறுதி நாட்களில் குறிப்பாக வெள்ளி இரவு, சனிக்கிழமை ஆகிய நாட்களில் க;டுதல் பஸ்களை தென்மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும். இதற்கு, மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu