திருப்பூரில் தொழிற்சாலை திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வது குறித்து ஆலோசனை
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் ( கோப்பு படம்)
கூட்டத்துக்கு மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், தொழில்துறையினர் கலந்துகொண்டனர்.தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. அந்த கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆராய பெங்களூருவை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் இந்த நிறுவனத்தினர் திருப்பூர் மாநகருக்கு உட்பட்ட தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து எவ்வளவு திடக்கழிவு குப்பை வெளியேறுகிறது. அவற்றை மறுசுழற்சி செய்து கட்டுப்படுத்தும் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
இதற்கு தொழில்துறையினருக்கு உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. இந்த தொண்டு நிறுவனத்தினர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திடக்கழிவுகளை அகற்றும் வழிமுறைகளை தெரிவிக்க உள்ளனர். இந்த நிறுவனம் ஏற்கனவே கோவை மாநகராட்சியில் தொழிற்சாலை திடக்கழிவு மறுசுழற்சி பணிகளை செய்து வருகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தும்போது குப்பை பிரச்னை வெகுவாக குறையும். வீதிகளில் குப்பை தேங்குவது தவிர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரக்கேடு பிரச்னைகளுக்கு தீர்வே இல்லையா?
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ௬௦ வார்டுகளிலும் உள்ள மற்றொரு முக்கிய பிரச்னை, சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் தேக்கம் மற்றும் அதிகமான கொசு தொல்லை. இதுவும், மக்களை தினமும் பாதிக்கிற அடிப்படை சுகாதாரப் பிரச்னையாகவே நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக, பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அது அனைத்து வார்டுகளிலும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதனால், இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலேயே வீடுகளில் கொசுத்தொல்லை பிரச்னை, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
மாநகராட்சி தரப்பில், சாக்கடை கால்வாய்களுக்கு கொசு மருந்து தெளிப்பாக கூறப்பட்டதாலும், கொசு மருந்து புகை அடிப்பதாக இருந்தாலும், அது பெயரளவில் சில முக்கிய மற்றும் பிரதான வீதிகள் மற்றும் ரோடுகளில் மட்டுமே அடிக்கப்படுகிறது. குடியிருப்புகள் நிறைந்த வார்டு பகுதிகளுக்குள், மாதம் ஒருமுறை கூட கொசு மருந்து தெளிக்கவோ, கொசு மருந்து புகை அடிக்கவோ, மாநகராட்சி ஊழியர்கள் வருவதே இல்லை. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
திருப்பூர் வளர்ந்துவிட்ட தொழில் நகரமாக இருந்தாலும், நகரம் இன்னும் ‘நரகமாக’ வே பல பகுதிகளில் காட்சியளிக்கிறது. குழியும் குண்டுமான பழுதடைந்த ரோடுகள், மாதக்கணக்கில் குப்பை தேங்கிய பகுதிகள், சாக்கடை கால்வாய்களில் அடைப்புகள், கொசு உற்பத்தி என, சுகாதாரக்கேடு இன்னும் முழுமையாக நீக்கப்படாத நகரமாகவே, திருப்பூர் ‘சிறந்து’ விளங்குகிறது.
மற்றொரு முக்கிய பிரச்னை, மாநகர பகுதிக்குள் நீடிக்கும் வாகன போக்குவரத்து நெரிசல் மற்றும் ரோட்டோர ஆக்கிரமிப்புகள். இவற்றையும் மாநகராட்சி மேயர், கமிஷனர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் நடத்த மட்டுமே, மாமன்ற கூட்டத்துக்கு வரும் மாநகராட்சி கவுன்சிலர், கொஞ்சம் மக்கள் நலனிலும் அக்கறை கொண்டு களப்பணி செய்ய வேண்டும் என்பதே, திருப்பூர் மாநகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu