திருப்பூரில் அனுமதியின்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 4 பேர் கைது

tirupur News, tirupur News today- திருப்பூரில், நைஜீரியர்கள் 4 பேர் கைது (கோப்பு படம்)
tirupur News, tirupur News today- திருப்பூரில் பின்னலாடை தொழில் நிமித்தமாக நைஜீரிய நாட்டினர் தங்கி இருந்து அவர்களின் சொந்த நாட்டுக்கு ஆடைகளை அனுப்பி வைக்கின்றனர். சிலர் இங்கேயே நிறுவனம் அமைத்து, ஆடை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு திருப்பூர் வரும் நைஜீரியர்கள், விசாவில் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு மேலும் தங்கி இருக்கின்றனர். இவ்வாறு விதிமீறி உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, திருப்பூர் ரயில்வே ஸ்டேசன், ராயபுரம், காதர்பேட்டை பகுதியில் நைஜீரியர்கள் அதிகம் தங்கியிருக்கின்றனர். திருப்பூர் வடக்கு போலீசார் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு நைஜீரியர்களை கண்காணித்து வருகின்றனர்.
நேற்று முன் தினம் மாலை ராயபுரம் நஞ்சப்பா பள்ளி அருகே உள்ள பகுதிகளில் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் வடக்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள நைஜீரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் உரிய ஆவணங்கள் கையில் இல்லாத 6 பேரை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் தங்களது ஆவணங்கள் வெளியூரில் நண்பர்களிடம் இருப்பதாக தெரிவித்தனர். ஆவணங்களை எடுத்துவர காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், 4 பேரிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் நைஜீரிய நாடு அனம்பரா பகுதியை சேர்ந்த ஓபினோ (வயது 41), ஆபம் பாஸ்கல் (33), அபாஸ் ஸ்டேட் பகுதியை சேர்ந்த ரிச்சர்டு உபா (40), இமோஸ் பகுதியை சேர்ந்த ஜான்பால் நமீகா (34) என்பதும் தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும், உரிய ஆவணங்கள் இன்றி, இந்தியாவில் தங்கியதற்கான வெளிநாட்டினர் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் அறிவுறுத்தல்
பனியன் தொழில் நிமித்தமாக, நைஜீரியர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாட்டினரும் திருப்பூருக்கு வந்து செல்கின்றனர். விசாவில் அனுமதிக்கப்பட்ட நாட்கள் மட்டுமே, அவர்கள் திருப்பூரில் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், ஒரு சிலர், குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பிறகும், இதுபோல் உரிய ஆவணங்களும், அனுமதியும் இன்றி திருப்பூரிலேயே தங்கி விடுகின்றனர். அதிக எண்ணிக்கையில், அவர்கள் நடமாட்டம் இருப்பதால், விசா நாட்களில் இருப்பவர்கள், கால அவகாசம் கடந்தும் விதிமீறி இருப்பவர்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தும்போது மட்டுமே தெரிய வருகிறது. தவிர, இதுபோல் விதிமீறி தங்கும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் சார்ந்து வருபவர்கள், குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பிறகு, திருப்பூரில் இருக்க நேரிடும் பட்சத்தில், சட்டரீதியாக அதற்கான அனுமதியை பெற்றிருப்பது கட்டாயம் என, திருப்பூர் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu