ரயில்களில் முன்பதிவு கிடைக்காததால் மக்கள் ஏமாற்றம்; திருப்பூர் வழித்தட ரயில்கள் ‘ஹவுஸ்புல்’
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரயில்களில், முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம். (கோப்பு படம்)
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரயில்களில், முன்பதிவு கிடைப்பதில்லை. ஜூன் மாதம் முதல் வாரம் வரை காத்திருப்பு பட்டியலில் இருப்பதால், சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று, திருப்பூர் மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளை பொறுத்தவரை கோடை விடுமுறை என்பது மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் நீண்ட நாள் விடுமுறை. இந்த விடுமுறை காலத்தில், பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் சுற்றுலா செல்வது வழக்கமாக உள்ளது. ஒரு சிலர் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பிரதேசங்களுக்கும், பலர் திருப்பதி, பழனி, திருச்செந்தூர், மதுரை என கோவில் நகரங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் குடும்பத்துடன் செல்கின்றனர். ஒரு சிலர் தங்களது சொந்த ஊர்களுக்கும் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கும் சென்று விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிக்கின்றனர். அந்த வகையில் திருப்பூரில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த மக்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் திருப்பூரில் இருந்து ஏராளமான பெற்றோர், தங்களது பிள்ளைகளுடன் சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் போய்,வருவதாக உள்ளனர்.
மேலும் தற்போது பள்ளிகளில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால், ஏராளமானோர் மேற்படிப்பு சம்பந்தமாகவும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பொது போக்குவரத்தான ரயில் மற்றும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக கோவையில் இருந்து திருப்பூர் வழியாக சென்னை மார்க்கத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. இதேபோல் தென்மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மற்றும் பெங்களூரு, கேரளா மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட் இல்லை. அனைத்து ரயில்களிலும் ஜூன் மாதம் முதல் வாரம் வரை முன்பதிவு டிக்கெட் 100 எண்களுக்கு மேல் வரை காத்திருப்பு பட்டியலில் உள்ளது.
இதனால் திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கும், வெளியூர்களில் இருந்து திருப்பூர் வருபவர்களும் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களில் பெரும்பாலானோர் ரயில் பயணம் பாதுகாப்பாகவும், எளிதாகவும் கருதுவதால் அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது.
கோடை விடுமுறை நிறைவடைய உள்ள நிலையில், பொதுமக்களின் நலன் கருதி திருப்பூர் வழியாக சென்னை, கோவை மற்றும் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் திருப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu