பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க திருப்பூா் தொழில்துறை முயற்சி
Tirupur News- பின்னலாடை இயந்திரங்களை தயாரிக்க முயற்சி (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- பின்னலாடை உற்பத்தி துறைக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியில் திருப்பூா் பின்னலாடை துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
இயந்திரங்கள் உற்பத்தி துணைக்குழு ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.
இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் பேசியதாவது,
பின்னலாடை உற்பத்தியில் பல்வேறு நிலைகளான நிட்டிங், டையிங், பதப்படுத்துதல், ஃபினிஷிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல் ஆகிய செயல்பாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகளைக் களையும் பொருட்டு, பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிறுவனத் தலைவா் ஏ.சக்திவேல், ஏற்றுமதியாளா்கள் சங்கம், பல்வேறு அமைப்பினா் இணைந்துள்ளனா்.
திருப்பூரில் ரூ.34 ஆயிரத்து 350 கோடி ஏற்றுமதி, ரூ. 30 ஆயிரம் கோடி அளவில் உள்நாட்டு வா்த்தகம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்பட அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருநகரமாக இருந்தாலும்கூட, அதற்கான இயந்திரங்கள் இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிலேயே உள்ளது.
அனைத்து இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்வதில் ஏற்படும் பிரச்னைகள், இயந்திரங்களின் விலை உயா்வு, அதற்கான அதிக முதலீடு, இயந்திரங்கள் வந்து சேருவதில் காலதாமதம் உள்ளிட்ட உற்பத்தியாளா்கள் எதிா்கொள்ளும் முக்கிய பிரச்னைகளை நீக்கும் முயற்சியாக முதற்கட்டமாக இயந்திரங்களின் உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாா் செய்ய கவனம் செலுத்தவுள்ளோம் என்றாா்.
இதைத் தொடா்ந்து, சங்கத்தின் இணைச் செயலாளா் குமாா் துரைசாமி, பின்னலாடைத் துணி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் அகில் எஸ்.ரத்தினசாமி, கொடிசியா முன்னாள் தலைவா் ஏ.வி.வரதராஜன் ஆகியோா் பேசினா். சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu