‘அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லை’ - ‘மாஜி’ அமைச்சர் வேலுமணி பேச்சு
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நடந்த அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.
Tirupur News,Tirupur News Today- ‘அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லை,’ என்று திருப்பூரில் நடந்த அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க பல்லடம் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், திருப்பூரை அடுத்துள்ள 63 வேலம்பாளையம் பகுதியில், ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பங்கேற்று ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். பல்லடம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது,
அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடி தொண்டர்களை வளர்த்தெடுத்தவர் ஜெயலலிதா. அ.தி.மு.க. அதிக தொண்டர்களை கொண்ட கட்சி. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து தமிழ்நாட்டையே ஆள முடியும் என நிரூபித்தவர் எடப்பாடி பழனிசாமி. சாதாரண கிளைச்செயலாளராக இருந்து முதல்- அமைச்சராக உயர்ந்தவர். அவர் அ.தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க சொல்லியுள்ளார். அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். கடந்த ஒன்றரை மாதங்களாக அ.தி.மு.க.வில் மட்டுமே புதிய உறுப்பினர்கள் அதிகளவில் இணைகின்றனர். புதிய உறுப்பினர்கள் அதிகளவில் அ.தி.மு.க.வில் சேர மட்டுமே விரும்புகின்றனர்
முதலமைச்சர் ஸ்டாலின் எதுவும் செய்யாமல் உள்ளார். எந்த திட்டமும் நடைபெறாமல் நடக்கும் ஆட்சிதான் ஸ்டாலின் ஆட்சி. இந்த ஆட்சியில் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்ந்துள்ளது. இதுதான் வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. கொடுத்த பரிசு. ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சாலைகள், பாலங்கள், கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. பல்லடம் சட்டமன்ற தொகுதியில், 407 பூத் கமிட்டிகள் உள்ளன. அ.தி.மு.க. நிர்வாகிகள் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்மைச்சராக வருவார்.
இவ்வாறு வேலுமணி பேசினார்.
கூட்டத்தில் பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பரமசிவம் மற்றும் அதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu