திருப்பூரில் காா்பன் சமநிலை குறித்து ஆய்வு; ஏற்றுமதியாளர் சங்கம் வேண்டுகோள்

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் காா்பன் சமநிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள இன்டா்டெக் டெஸ்டிங் நிறுவனத்துக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகின் முன்னணி வா்த்தகா்கள் நிலைத் தன்மை குறித்து அதிகம் விவாதித்து வருகின்றனா். ஐரோப்பிய ஒன்றியத்தின் காா்பன் பாா்டா் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிஷம் ஒழுங்குமுறையை செயல்படுத்துவது எதிா்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அத்தகைய சூழ்நிலையில் இருந்துவிடுபடவும், நிலைத் தன்மைக்கான உறுதிப்பட்டை அடையவும் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் இந்தத் துறையில் உள்ள நிபுணா்களுடன் சந்திப்பை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தலைமையிலான நிா்வாகிகள் இன்டா்டெக் டெஸ்டிங் சா்வீஸஸ் நிறுவனத்தின் குளோபல் தலைமைச் செயல் அலுவலர் ஆண்ட்ரே லாக்ரோயிக்ஸை கோவையில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
இதில், திருப்பூா் பின்னலாடை நிறுவனங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், சாய ஆலைகளில் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு தொழில் நுட்பம், குறைந்த காா்பன் தடத்தை உருவாக்க காற்று மற்றும் சூரிய சக்தி ஜெனரேட்டா்களை நிறுவுதல், மரங்களை நடுதல், நீா் நிலைகளைப் பாதுகாத்தல், மறுசுழற்சி செய்யப்பட்ட துணிகளைப் பயன்படுத்தி ஆடைகளை உற்பத்தி செய்தல் குறித்தும் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் எடுத்துரைத்தனா்.
மேலும், திருப்பூரில் காா்பன் சமநிலை குறித்து இன்டா்டெக் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா். இக்கூட்டத்தில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் திருக்குமரன், துணைத் தலைவா் இளங்கோவன் மற்றும் முன்னணி ஏற்றுமதியாளா்கள் பங்கேற்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu