திருப்பூரில் கஞ்சா சாக்லேட் விற்பனை; வடமாநில வாலிபர்கள் இருவர் கைது
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்து, மும்மூர்த்தி நகர் உள்ளது. இப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான விடுதி அருகே, வடமாநில வாலிபர் ஒருவர் கஞ்சா மற்றும் போதை சாக்லெட் விற்பனை செய்வதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார், குறிப்பிட்ட அந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். இதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிரஞ்சன் பிரதான் (வயது 38) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் அந்த பகுதியில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கால் கிலோ கஞ்சா, 16 டப்பா போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக வடமாநிலங்களில் இருந்து டப்பாக்களில் அடைத்து கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து, திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல் அவிநாசி போலீசார் பழங்கரை பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா சாக்லேட் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரேம் சிங் ரின்வா (வயது 21) என்பவரை கைது செய்தனர்.
கோவையை தொடர்ந்து திருப்பூரிலும்....
திருப்பூர் அருகில் உள்ள மாவட்டமான கோவையில், கஞ்சா சாக்லேட் விற்பனை அதிகரித்து வந்தது. கோவை மாநகர போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி, போதை சாக்லேட் விற்கும் வியாபாரிகளை கைது செய்து, அவர்களிடம் இருந்து மூட்டை, மூட்டையாக கஞ்சா சாக்லேட்டுகளை சில மாதங்களுக்கு முன் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் நிறைந்துள்ள திருப்பூரிலும், கஞ்சா சாக்லேட் விற்பனை கலாசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலரது மத்தியில் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் பரவி வருகிறது. இந்நிலையில், கஞ்சா சாக்லேட் மீதும், மாணவர்கள் கவனம் செல்லும் ஆபத்து உள்ளது. எனவே, கஞ்சா சாக்லேட் விற்பனையை முளையிலேயே கிள்ளி எறியும் விதமாக, அடியோடு ஒழிக்க அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu