திருப்பூர்; உற்பத்தி அதிகரிப்பால் ஜவுளிப் பொருட்களை விற்பனையாக்கும் திட்டங்களில் கவனம் செலுத்த சைமா கோரிக்கை
Tirupur News- திருப்பூரில் உள்ள சைமா அலுவலகம் முகப்பு தோற்றம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜவுளிப்பொருட்களை விற்பனையாக்கும் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சைமா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியிருப்பதாவது,
நமது நாட்டில் ஜவுளித்தொழில் என குறிப்பிடும்போது கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, ஆயத்த ஆடை மற்றும் நூற்பாலைகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்றின் காலத்தில் இருந்து தற்போது வரை ஜவுளித்தொழில் பின்னடைவை சந்தித்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் கடன், மானியம், வட்டி தள்ளுபடி என பல சலுகைகளை அறிவித்து ஜவுளி தொழிலை காப்பாற்ற நினைக்கிறார்கள். ஆனால் நமக்கு போட்டியாக உள்ள பிற நாடுகளில் ஜவுளித்தொழிலில் பிரச்சினை இல்லை. காரணம், அந்த அரசு உற்பத்தி உயர்வை மட்டுமே கணக்கிடாமல், உற்பத்தி ஆன பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உடனுக்குடன் விற்பனை செய்வதற்கான வழிவகைகளை செய்து வருகிறது.
இந்திய அரசு மற்றும் தமிழக அரசும் ஆடை உற்பத்திக்கான உதவிகளை, சலுகைகளை மாற்றி யோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசின் உதவிகளையும், உறுதிமொழிகளையும் பெற்று புதிய, புதிய ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பெருகி வருகிறது. மேலும் ஏற்கனவே உள்ள உற்பத்தியாளர்களும் உற்பத்தியை பெருக்குவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தி வருகிறார்கள்.உற்பத்தி பெருக்கத்தில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.
ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நுகர்வோர்களிடம் கொண்டு சேர்ப்பதில் புதுமையான வழிமுறைகளை கண்டுபிடிக்க தவறி வருகிறோம். பிற போட்டி நாடுகளில் திட்டங்களை கூர்ந்து ஆராய வேண்டும். உற்பத்தி பெருக்கத்தை முன்னிலைப்படுத்தும் நேரத்தில் உற்பத்தியாகும் பொருட்களை உடனுக்குடன் விற்பனையாகும் வகையில் நுகர்வோரை சென்றடைய வணிக நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் புதிய வணிக வாய்ப்புகளை கண்டறியும் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu