திருப்பூரில் அடகுக்கடையில் ரூ.80 லட்சம் மோசடி; 3 ஊழியா்கள் கைது
Tirupur News- திருப்பூரில் அடகுக்கடையில் ரூ.80 லட்சம் மோசடி செய்த 3 ஊழியா்கள் கைது (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today - திருப்பூரில் அடகுக் கடையில் போலி ரசீது அச்சடித்து ரூ.80 லட்சம்மோசடியில் ஈடுபட்ட ஊழியா்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனா்.
திருப்பூா், கரட்டாங்காடு பகுதியில் சுரேஷ்பாண்டி (32) என்பவா் கடந்த 8 ஆண்டுகளாக நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். மேலும், இவருக்கு ராக்கியாபாளையம் பிரிவிலும் ஒரு அடகுக் கடை உள்ளது. கரட்டாங்காடு கடையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த அருண் (25), ராக்கியாபாளையம் பிரிவு கடையில் கோவை மாவட்டம், வால்பாறையைச் சோ்ந்த சக்திவேல் (26), பிரதீப் (27) ஆகியோா் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், கடையின் பெயரில் போலி ரசீது அச்சடித்து நகைகளை அடகு வைத்ததுபோல கணக்குக்காட்டி கடந்த 2019-ம் ஆண்டு முதல் அருண் பணமோசடியில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
கடைக்கு சுரேஷ்பாண்டி வரும்போது ராக்கியாபாளையம் பிரிவு கடையில் இருந்து போலி ரசீதுக்குத் தகுந்தவாறு நகைகளைக் கொண்டு வந்து வைத்துள்ளாா். அவா் சென்ற பிறகு மீண்டும் அங்கேயே கொண்டுபோய் நகைகளை வைத்துள்ளாா். மோசடிக்கு சக்திவேல், பிரதீப் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனா்.
இதுபோல போலி ரசீது அச்சடித்து அடகுக் கடையில் இருந்து ரூ.80 லட்சம் வரை பண மோசடி செய்தது தணிக்கையில் தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூா் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் சுரேஷ்பாண்டி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அருண், சக்திவேல், பிரதீப் ஆகிய 3 பேரையும் நேற்று (புதன்கிழமை) கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்து ரூ.24 லட்சம் மதிப்பிலான நகைகளையும் பறிமுதல் செய்தனா். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu