திருப்பூரில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம்

திருப்பூரில் பிரதான ரோடுகளில், போக்குவரத்து இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
திருப்பூர் மாநகர பகுதிகளில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரதான ரோடுகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். அதன்படி ஆர்.டி.ஓ. தலைமையிலான குழு, ஆலோசனை நடத்தி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
நேற்று காலை திருப்பூர் டவுன்ஹால் முதல் தென்னம்பாளையம் வரை குமரன் ரோடு, காமராஜர் ரோடு, பல்லடம் ரோட்டில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமையில் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழு இந்த பணியில் ஈடுபட்டது.
ரோட்டோரம் உள்ள கடைகளுக்கு முன் இருந்த தற்காலிக பந்தல்கள், பெயர் பலகைகள், சிறிய கட்டிடங்கள், தள்ளுவண்டிகள், குடைகள், சாக்கடை கால்வாய்க்கு மேல் போடப்பட்ட கான்கிரீட் தடுப்புகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் பகுதியில் கடைகளுக்கு முன் போடப்பட்டு இருந்த பந்தல்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பெரும்பாலான கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். அவ்வாறு அகற்றாதவர்களின் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கொண்ட குழுவினர் அதிரடியாக அகற்றினார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் நேற்று அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu