புரட்டாசி சனிக்கிழமை; திருப்பூரில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Tirupur News- திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில், இன்று காலை பெருமாளை தரிசிக்க காத்திருந்த பக்தர் கூட்டம்.
Tirupur News,Tirupur News Today- புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இதில் இந்த மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில் திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கியது. 6 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் பெருமாள் கோவிலில் பக்தர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்வதற்கு வசதியாக கோவிலின் வெளியேயும், உள்ளேயும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருந்தது. இதேபோல் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள திருப்பூர் திருப்பதி கோவிலிலும், பக்தர்கள் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இங்கு அதிகாலை 5.30 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் சிறப்பு பூஜைகள் தொடங்கின.
இதையடுத்து தோமாலை சேவை, திருவாராதன ராஜ உபசார பூஜை, பஞ்சாங்க பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, சாற்றுமறை, சகஸ்ரநாம பாராயணம், காலை 9 மணிக்கு உற்சவபெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம், அஷ்டோத்ர அர்ச்சனை, உச்சிகால பூஜை நடைபெற்றது. காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும், பிற கோவில்களில் உள்ள பெருமாள் சன்னதிகளிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
திருப்பூர் பல்லடம் ரோடு, அல்லாளபுரம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதிகாலை முதல், பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு வந்து, சுவாமியை வழிபட்டனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu