திருப்பூரில் பவர்டேபிள் கட்டணங்கள் நாளை முதல் உயர்வு
Tirupur News,Tirupur News Today- பவர்டேபிள் கட்டணங்கள் நாளை முதல் உயர்வு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- உள்நாட்டு விற்பனைக்காக பனியன் மற்றும் ஆடைகள் உற்பத்தி செய்து கொடுக்கும் பவர் டேபிள் நிறுவனங்கள் திருப்பூரில் இயங்கி வருகின்றன. பிராண்டட் மற்றும் உள்நாட்டு விற்பனை ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஜாப்ஒர்க் முறையில் உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இவர்களுக்கு புதிய கட்டண ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி புதிய ஒப்பந்தம் உருவாகியது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.
பனியன் பேக் பட்டி டிராயர், பேக்பட்டி டபுள் பாக்கெட் ரகங்களுக்கு தனித்தனியே கட்டண உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி முதல் ஆண்டுக்கு 17 சதவீதம் கட்டண உயர்வு வழங்கப்பட்டது.அடுத்து வரும் ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். முதல் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், நாளை 6-ம் தேதி முதல் நடைமுறை கட்டணத்தில் இருந்து 7 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டுமென பவர்டேபிள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பனியன் தையலுக்கு ஒரு டஜனுக்கான கட்டணம் ரூ.76.05 ரூபாயாக இருந்தது நாளை முதல் 81.37 ரூபாயாக உயர்கிறது. பேக் பட்டி டிராயர் கட்டணம் ரூ.146.64 ஆக இருந்தது 157.02 ரூபாயாக உயர்கிறது. பேக் பட்டி டபுள் பாக்கெட் கட்டணம் 154.64 ரூபாயாக இருந்தது 165.46 ரூபாயாக உயர்வதாக பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் 4ம்தேதி 4 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. முதல் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் 7 சதவீத கட்டண உயர்வு நாளை 6-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சைமா உறுப்பினர் நிறுவனங்கள், புதிய கட்டணத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும். தொழிலாளர் சம்பளம், மின் கட்டணம் போன்ற செலவு அதிகரித்துள்ளதால் பவர் டேபிள் நிறுவனங்களுக்கான 7 சதவீத கட்டண உயர்வை 6-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும், என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu