அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்திய பயணிகள்; திருப்பூரில் பரபரப்பு
Tirupur News- திருப்பூரில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்திய பயணிகளால் பரபரப்பு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று மதியம் ஹூப்ளியில் இருந்து கொச்சுவேலிக்கு புறப்பட்டது. பெங்களூரு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த போது, அந்த ரயிலின் ஏ1 குளிர்சாதன பெட்டியில் ஏ.சி.யில் பழுது ஏற்பட்டது. ஏ.சி. சரியாக இயங்காததால் அந்த பெட்டியில் பயணித்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் சரி செய்வதாக கூறியுள்ளனர். ஆனால் பழுதான ஏ.சி.யை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சேலம், ஈரோட்டை கடந்து நேற்றிரவு 11 மணிக்கு ரயில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. அங்கேயும் ஏ.சி.யை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஏ1 பெட்டியில் பயணித்த பயணிகள் ரயில் புறப்பட தயாரான போது, அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினர். இதைப்பார்த்த திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள், போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அதிகாரிகள் மற்றும் போலீசார், குளிர்சாதன பெட்டியில் பயணித்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பயணிகள், நாங்கள் பணம் கொடுத்து தான் பயணிக்கிறோம். பெங்களூருவில் இருந்து ஏ.சி. இயங்காததால் பயணிப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. உடனே சரி செய்து தாருங்கள் என்று அதிகாரிகள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அதிகாரிகள், கோவை போத்தனூர் சென்றதும் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் ரயில் திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றது. போத்தனூர் சென்றதும் அங்கு ஏ.சி. பழுதான ஏ1 பெட்டி மாற்றப்பட்டு மாற்றுப்பெட்டி இணைக்கப்பட்டது. அதன்பிறகு பயணிகள் நிம்மதியுடன் பயணித்தனர். ஏ.சி.இயங்காததால் பயணிகள் ரயிலை நிறுத்திய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் காரணமாக திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அரை மணிநேரம் தாமதமாக கொச்சுவேலிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் சற்று சிரமம் அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu