திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணிகள் ‘விறுவிறு’; விற்பனையும் ‘ஜரூர்’
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணி, தீவிரமாக நடக்கிறது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- நாட்டின் 76-வது சுதந்திர தினம் வருகிற 15-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியேற்றி நாட்டு மக்களின் இணைப்பை மேலும் வலுவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணிகள் மற்றும் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
குறிப்பாக பனியன் நகரமான திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் தேசிய கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த கொடி தயாரிப்பாளர்கள் கூறியதாவது,
தற்போது 76வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து பொதுமக்கள் தேசிய கொடிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேசியக்கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் (கோப்பு படம்)
தமிழகத்தை பொறுத்தவரை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சில நிறுவனங்களில் மட்டும் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் இருந்து காகிதம் மற்றும் பாலியஸ்டர் துணி கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இருப்பினும் காட்டன் துணி கொடிகள் உற்பத்தி திருப்பூர்-கோவையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் வரப்பெற்று திருப்பூர், கோவை நிறுவனங்களில் உற்பத்தி மும்முரமாக நடக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன. ஆர்டர்கள் கொடுத்தவர்களுக்கு தேசிய கொடிகளை தயாரித்து கொடுக்க தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். ஆர்டர்களின் பேரில் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகள் உடனுக்குடன் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தேசிய கொடிகள் இன்னும் 2 நாட்களில் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுவரை 20 லட்சம் கொடிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, என்றார்.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், கொரோனா தொற்றின்போது, முகக்கவசம் உள்ளிட்டவை செய்வதற்கு ஆர்டர் குவிந்தது போல் கடந்த ஆண்டு 75-வது சுதந்திர தினம் மூலம் தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் குவிந்தன. பல பின்னலாடை நிறுவனங்கள் 30 லட்சம் வரை தேசியகொடிகள் தயாரிக்க ஆர்டர் பெற்று தயாரித்து அனுப்பப்பட்டன. பெரும்பாலான பொதுமக்கள் கடந்த ஆண்டே தேசிய கொடிகள் வாங்கி விட்டதால், இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் வந்துள்ளன. இதனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன, என்றனர்.
பனியன் நிறுவனங்கள் மட்டுமின்றி தபால் அலுவலகங்கள், மகளிர் சுய உதவிக்குழுவின் விற்பனை மையங்கள் மற்றும் கடைகள், சாலையோர கடைகள் என பல இடங்களிலும் தேசியக்கொடி விற்பனை நடந்து வருவதால், திருப்பூரில் தேசிய கொடிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu