திருப்பூர்; உழவர் சந்தையில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திடீர் ஆய்வு
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சாமிநாதன். அருகில் கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்ளார்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் பிஎன் ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வடக்கு உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று அதிகாலை சென்று ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் கிறிஸ்துராஜ் சென்று இருந்தார். அப்போது சந்தையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 1999-ம் ஆண்டு விவசாயிகளின் நலன் காக்க தமிழ்நாடு முழுவதும் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டது. உழவர் சந்தை என்பது விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிடும் காய்கறிகள், பழங்களை பயிர் செய்தவற்றை அவர்களே இடைத்தரர்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட சந்தைகள் ஆகும்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் (வடக்கு) திருப்பூர் (தெற்கு) பல்லடம், உடுமலை, தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய 6 பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழவர் சந்தையில் ஒவ்வொரு விவசாயிக்கும், தனியே இடம் ஒதுக்கப்பட்டு இலவசமாக எடைக்கருவிகள் வழங்கப்படுகின்றன.
உழவர் சந்தையில் விற்பனை மேற்கொள்ள விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெற்றவர்கள் தவிர அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தைக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு வரக்கூடும் என்ற நோக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் படமும் அந்த அடையாள அட்டையில் இடம் பெற்றுள்ளன. உழவர் சந்தை ஒவ்வொன்றிற்கும் தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உழவர் சந்தைகளில் விலைப்பட்டியல் கொண்ட பலகை வைக்கப்பட்டுள்ளன. உழவர் சந்தை விலைகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழு நாள் தோறும் நிர்ணயிக்கிறது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை உழவர் சந்தைகளுக்கு சென்று வாங்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறினார். அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த சாமிநாதன், அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu