'வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த வரம்'

திருப்பூரில் நேற்று, உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, நேற்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில் கல்லூரி நுழைவுவாசலில், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். மாணவ செயலாளர் பூபதிராஜா வரவேற்றார்.
நிகழ்ச்சியில், திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி 'டீன்' முருகேசன் பேசியதாவது:
'செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்' என்ற தலைப்பில், இந்த ஆண்டு உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் சர்வசாதாரணமாக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரை கூறினாலும் காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, கடன் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை முடிவுகளை பலரும் எடுக்கிறார்கள்.
அரிது அரிது மானிடனாக பிறப்பது அரிது, இன்பம் இருக்கும் இடத்தில் துன்பங்களும் இருக்கும். அதை ஆராய்ந்து வாழ வேண்டும். பிரச்சினைகளுக்கு தற்கொலை எப்போதுமே தீர்வாகாது. தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின் நோக்கமாகும். முடிந்த அளவுக்கு தனிமையில் இருந்து வெளியே வர வேண்டும். பிரச்சினைகளை மனதிற்குள் வைக்கக்கூடாது. மாணவர்கள் பெற்றோரிடம், மனம் விட்டு பேச வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த வரம். அதை அனுபவித்து வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், 'பள்ளி, கல்லூரிகளில் ஆலோசனை குழுக்களை ஏற்படுத்தி, அதன் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம்' என்றார்.
வாகன ஓட்டிகளுக்கு தற்கொலை தடுப்பு ரிப்பனை மாணவ-மாணவிகள் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்; விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் வினியோகம் செய்தனர். 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu