‘பனியன் தொழிலை மீட்டெடுப்போம்’ - திறந்தவெளி கருத்தரங்கம்; அக்டோபா் 5 -ம் தேதி நடத்த முடிவு
Tirupur News- பனியன் தொழிலை பாதுகாக்க, திருப்பூரில் கருத்தரங்கம் நடத்த முடிவு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today-- ‘பனியன் தொழிலை மீட்டெடுப்போம், தொழிலாளா் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் திறந்தவெளி கருத்தரங்கம் அக்டோபா் 5 -ம் தேதி நடத்தப்படுவதாக அனைத்து பனியன் தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் கூட்டம் ஏஐடியூசி பனியன் சங்க அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு ஏஐடியூசி பனியன் சங்க துணைத் தலைவா் எம்.ரவி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், ஏஐடியூசி சாா்பில் என்.சேகா், சிஐடியூ சாா்பில் ஜி.சம்பத், எல்.பி.எஃப்.சாா்பில் கா.ராமகிருஷ்ணன், பூபதி, ஐஎன்டியூசி சாா்பில் சிவசாமி, பெருமாள், எச்.எம்.எஸ்.சாா்பில் முத்துசாமி, எம்.எல்.எஃப்.சாா்பில் மனோகரன் ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினா் பேசியதாவது,
திருப்பூா் பின்னலாடைத் தொழில் லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துக் கொண்டிருக்கிறது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 50 சதவீதம் திருப்பூரில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மத்திய அரசுக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, கரோனா தாக்கம், பருத்தியை அத்தியாவசியப் பட்டியலில் இருந்து நீக்கியது உள்ளிட்ட மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தற்போது பின்னலாடை உற்பத்தித் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பின்னலாடைகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் உள்நாட்டு விற்பனையும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
ஆகவே, ‘பின்னலாடைத் தொழிலை மீட்டெடுப்போம், தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு திறந்தவெளி கருத்தரங்கம் அக்டோபா் 5 -ம் தேதி மாலை 4 மணி அளவில் நடக்க உள்ளது.
இதில், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், சிஐடியூ மாநில பொதுச் செயலாளா் ஜி.சுகுமாரன், எச்.எம்.எஸ்.மாநில செயல் தலைவா் சுப்பிரணியபிள்ளை உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசவுள்ளனா். இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு கேட்டு அனைத்து பின்னலாடை உற்பத்தியாளா்கள் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்களுக்கும் கடிதம் அளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றனா்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu