வரிவசூலில் ரூ. 113 கோடியை கடந்த திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை ரூ.113.5கோடி வரியினங்கள் (47.96 சதவீதம்) வசூலிக்கப்பட்டுள்ளது.(கோப்பு படம் - திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முகப்பு தோற்றம்)
திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி உள்ளது. சொத்துவரி, தொழில்வரி போன்ற வரிகள் மூலம் பெறப்படும் வருவாயை கொண்டு திருப்பூர் மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், நோய்தடுப்பு நடவடிக்கை, பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை மொத்தம் ரூ.79 கோடியே 13 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஜனவரி மாதம் வரி வசூலிப்பு பணிகளை துரிதப்படுத்தியதன் காரணமாக சொத்துவரி ரூ.66 கோடியே 47 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.15 கோடியே 66 லட்சம் உள்பட மொத்த வரியினங்கள் ரூ.101 கோடியே 83 லட்சம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து வரி வசூலிப்பு பணிகள் நடந்து வருகிறது. நேற்று வரை மாநகராட்சியில் சொத்துவரி ரூ.73 கோடியே 66 லட்சமும், காலியிட வரி ரூ.2 கோடியே 12 லட்சம், தொழில்வரி ரூ.3 கோடியே 20 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.17 கோடியே 68 லட்சம், வாடகை, குத்தகை இனங்கள் ரூ.3 கோடியே 68 லட்சம், பாதாள சாக்கடை கட்டணம் ரூ.46 லட்சம் என மொத்தம் ரூ.113 கோடியே 58 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாநகராட்சியில் 47.96 சதவீதம் வரியினங்கள் மற்றும் வாடகையினங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் வரி வசூல் பொதுமக்கள் விடுமுறை நாட்களில் வரி செலுத்த வசதியாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், 4 மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தனம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணினி வரிவசூல் மையங்களில் பணமாகவோ, காசோலையாகவோ செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைந்து செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி முன்பு நகராட்சியாக இருந்தபோது, 52 வார்டுகளை மட்டுமே கொண்டு இருந்தது. பின்பு, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு, வார்டு பகுதிகள் விரிவு செய்யப்பட்டது. அந்த வகையில், நகராட்சியாக இருந்த போது, சுற்றுவட்டார பகுதிகளில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய கிராமப்பகுதிகளாக இருந்த பகுதிகளும், மாநகராட்சி பகுதிகளுக்குள் இணைக்கப்பட்டன. அதற்கேற்ப வரியினங்களிலும் அதிக வசூலை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதே போல், விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், மாநகராட்சி பகுதிகளில் பல வளர்ச்சிப்பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu